தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து சிறைகளில் அடைத்து வைத்திருக்க முடியாது! சம்பந்தன்
பயங்கரவாத தடைச் சட்டமானது சட்ட புத்தகங்களில் இருந்து நீக்கப்பட வேண்டிய ஒன்றும் என இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.கொழும்பில், ஐ.நாவின் விசேட சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரீப்புக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
இதன்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்தும் சிறைகளில் வைத்திருக்க முடியாது என்று ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப்பிடம் வலியுறுத்தியுள்ளார்.</p><p>காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் போன்ற விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஐ.நாவின் விசேட அறிக்கையாளரின்கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
படையினர் அபகரித்துவைத்துள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி, சில பிரதேசங்களில் கடந்த 300 நாட்களுக்கும் அதிகமாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயமானது மக்களின் உணர்வுகளோடும் அவர்களது உரிமைகளோடும் சம்பந்தப்பட்ட விடயம் என்பதை இலங்கை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உண்மையான புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டுமெனில் இந்த யதார்த்தம் புரிந்துகொள்ளப்பட வேண்டும். குறித்த விடயங்கள் மேலும் தாமதமின்றி முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், "ஒரு தாய் தனது மகனை படையினரிடமோ அல்லது பொலிஸாரிடமோ கையளித்திருந்தால் அவருக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்துகொள்ளும் உரிமை உள்ளது. அந்த உரிமையை மறுக்க முடியாது" என்று கூறியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் செயலாக்கம் தொடர்பில் காணப்படும் தாமதம் குறித்து தமது கரிசனையை இரா. சம்பந்தன் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த அலுவலகம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் நிறுவப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார். அரசியல் கைதிகள் ஒவ்வொருவரினதும் வழக்குகள் அரசியல் பரிணாமத்தைக் கொண்டுள்ளது. அந்த அடிப்படையில் நோக்கப்பட்டு முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.இதேவேளை, இலங்கை விஜயத்தின் முடிவில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் தனது கருத்தை தெரிவிக்கவுள்ளதாக ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், அரசியல் தீர்வை அடையும் வகையிலும் தனதும் ஐ.நாவினதும் தொடர்ச்சியான பங்களிப்பு இருக்கும் என்றும் இந்தச் சந்திப்பில் வாக்குறுதியளித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து சிறைகளில் அடைத்து வைத்திருக்க முடியாது! சம்பந்தன்
Reviewed by Author
on
October 22, 2017
Rating:

No comments:
Post a Comment