முயன்றால் தான் வெற்றி..!
‘முயற்சி’ வெற்றிக்கு முதல்படி மட்டுமல்ல; முக்கிய படியும் ‘முயற்சி’ தான்!
ஒரு செயலைத் தொடங்கியவுடனேயே வெற்றி ஒருபோதும் கிடைத்து விடாது. கிடைத்தாலும் அது நிலைத்த வெற்றியாக இருக்காது! நம்மைச் சுற்றி பலர் தோல்வியில் துவள்வதைப் பார்க்கிறோம். அவர்கள் எல்லாம் திறமை இல்லாதவர்களா? நிச்சயம் இல்லை. தொடர் முயற்சி செய்யாதவர்கள் என்பதே உண்மை!
மாடு மேய்க்கும் வாலிபன் ஒருவன் அவன் வளர்க்கும் பசு ஈன்ற கன்றை சிறு குட்டியாய் இருக்கும் போதிலிருந்தே தினமும் தோளில் தூக்கி வந்தான். நாட்கள் கடந்தன, கன்றும் காளையானது. அப்போதும் வாலிபன் தூக்கிச் செல்வதைப் பார்த்து மற்றவர்கள் வியந்து போனார்கள். ஆனால் அந்த இளைஞனுக்கோ அது சாதாரண செயலாய் இருந்தது. இது எப்படி சாத்தியம்? அந்த இளைஞன் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தொடர் முயற்சி தான்.
ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்... ஒருவேளை, அந்த மாடு மேய்க்கும் வாலிபன் அவ்வாறு கன்றிலிருந்து தூக்கி பழகாதபோது, திடீரென ‘ஒரு காளையை தோள் மேல் தூக்கு செல்’ என்றால் அந்த வாலிபனால் அது சாத்தியமாகுமா?
தொடர்ந்து செயல்பட்டால் தான் வெற்றிக் கனி நம் மடியில் வந்து விழும். படிப்பு ஆனாலும், நாம் செய்யும் எந்த வேலையானாலும், சரியானபடி திட்டமிட்டு தொடர்ந்து அதனை செயல்படுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை பள்ளியிலும், தொடர்ந்து வீட்டிலும் படிக்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எழுதிப் பார்க்கச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அது மனதில் நன்கு பதியும்; மறக்காது. இதனால் வெற்றி உறுதி என்பதை மாணவர்களுக்கு உறுதியாய்ச் சொல்ல வேண்டும். தினசரி படிக்காமல் பரீட்சைக்கு முன் தினம் மட்டும் படித்தால் அது தோல்வியில் தான் முடியும்!
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு‘
மணலைத் தோண்டத் தோண்ட நீர் சுரக்கும். அது போல படிக்க படிக்க அறிவு வளரும், என்றார் வள்ளுவர். இதுவே நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது, ஒவ்வொரு மாணவனையும் செய்யத் தூண்ட வேண்டியது.
நன்றி : தினமலர்-
முயன்றால் தான் வெற்றி..!
Reviewed by Author
on
October 03, 2017
Rating:

No comments:
Post a Comment