மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற உன்னதமான ஓர் அவையே பாராளுமன்றம்---அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்
மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற உன்னதமான ஓர் அவையே பாராளுமன்றம். இதற்கான பிரதிநிதிகளை உருவாக்கும் பயிற்சிப் பாசறையே மாணவர் பாராளுமன்றம்
- அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்
மக்களின் கருத்துக்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கின்ற உன்னதமான மேன்மையான ஒரு அவையே பாராளுமன்றம். மக்களின் குரலாக ஒலிக்கும் பாராளுமன்றம் பற்றி மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும். இந்தப் பாராளுமன்றத்திற்கு எதிர்காலத்தில் படித்தவர்கள் பண்பானவர்கள் கல்விமான்கள் செல்ல வேண்டும். இதன் ஊடாக தமிழ் மக்களாகிய நாம் நமது ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம்.மாற்றுக்கொள்கைகளை மாற்றுக்கருத்துக்களை மதிக்கின்ற மனப்பக்குவம் என்பன மாணவர் பராயத்தில் இருந்தே வளர்க்கப்பட வேண்டும். அதற்குரிய பயிற்சிப்பாசறையாக இதுபோன்ற மாணவர் பாராளுமன்ற அமர்வுகள் அமைய வேண்டும் என மன்னார் மறைமாவட்ட கலையருவி அமைப்பின் இயக்குனரும் மன்னா என்ற கத்தோலிக்க பத்திரிகையின் ஆசிரியருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார்.
கடந்த புதன் கிழமை (15.11.2017) மடு வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வலய மாணவர் பாராளுமன்றம் 2017 நிகழ்வில் கலந்துகொண்டு அந்த பாராளுமன்ற அமர்வுகள் குறித்த விமர்சன உரையை வழங்கும்போதே தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலினி வெனிற்றன் அவர்கள் இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். இந்நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள்ää விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. இ.இரவீந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் மேலதிக கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திருமதி. பி. செல்வின் இரேனியஸ் அவர்களும் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் மற்றும் பிரதேச செயலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் நேசன் அடிகளார் மேலும் கூறுகையில்ää ஒருசில அரசியல்வாதிகளின் தவறானää கீழ்த்தரமான செயற்பாடுகளால் அரசியல் பற்றிய தவறான கண்ணோட்டம் இன்று மக்களிடம் காணப்படுகின்றது. அதனால் அரசியல் ஒரு சாக்கடை என்ற மனப்பதிவு ஏற்பட்டுள்ளது.
அரசியல் என்பது சாக்கடை அல்ல. அது புனிதமானது. அரசியல் பற்றிக் கூறிய மகாத்மா காந்தி “;தியாகத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்டும் இடம்தான் அரசியல். பாமர மக்களின் ஆதங்கங்களினதும் ஆவேசங்களினதும் வெளிப்பாடே அரசியல்” என்று சொன்னார். சீன தத்துவஞானி மாசேதுங் “போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல்- அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்” என்று சொன்னார். இந்த மகான்கள் எல்லாம் அரசியலின் அவசியத்தை- அதன் தாற்பரியத்தை வலியுறுத்தி உள்ளனர். கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய ஏடுகளில் ஒன்றாகிய இரண்டாம் வத்திக்கான் சங்க ஏட்டில் “இன்றைய உலகில் திருச்சபை” என்ற பிரிவில் அரசியலின் முக்கியத்துவம்பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
தமிழ் மக்களாகிய நாம் நமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட நெடிய அகிம்சைப்போர் ஆயுதப்போர் போன்றவற்றை கடந்து வந்துள்ளோம். இப்போது பாராளுமன்ற அரசியல் ஊடாக ஜனநாயக வழியில் நமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுதான் யதார்த்தம். இதைவிட வேறு வழி நமக்கு இல்லை. எனவே தமிழ் மக்கள் சார்பில் பாராளுமன்றத்திற்கு நாம் அனுப்பும் பிரதிநிதிகள் புத்திஜீவிகளாக கல்விமான்களாக சுயநலம் அற்றவர்களாக மக்கள் தொண்டர்களாக இருக்க வேண்டும். அதற்கு அடித்தளம் இடுவதாக இந்த மாணவர் பாராளுமன்றம் அமைய வேண்டும்.
மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற உன்னதமான ஓர் அவையே பாராளுமன்றம்---அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்
Reviewed by Author
on
November 16, 2017
Rating:

No comments:
Post a Comment