நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது! -
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
சுமார் 26 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்து வருகின்ற இவர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள தன்னை நன்னடத்தை அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி ஒரு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த ஜூலை மாதம் நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்தார். அப்போது தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் நளினி மனு மீது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யக் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என உத்தரவிட்டார்.
இதையடுத்து நளினியின் விடுதலை குறித்து தமிழக உள்துறை செயலாளர் தேவாசீர்வாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஒரு பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அதில் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் இந்த வழக்கு சிபிஐ விசாரணை நடத்தியதாலும் அதில் தமிழக அரசு தலையிட முடியாது.
எனவே நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பதில் மனுவில் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது! -
Reviewed by Author
on
November 16, 2017
Rating:

No comments:
Post a Comment