மன்னாரில் சூடு பிடித்துள்ள பண்டிகைக்கால வியாபாரம்.(photos)
-கடந்த வருடத்தை விட இம்முறை மன்னாரில் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளது.
மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் மன்னார் நகர சபையினால் வருடா வருடம் பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொள்ள குத்தகைக்கு இடம் வழங்கப்பட்டு வருகின்றமை வழமை.
அந்த வகையில் இம்முறையும் எதிர்வரும் நத்தார்,புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை வியாபாரங்களை மேற்கொள்ள மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பிரதான வீதியோரங்களில் குத்தகைக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
அதிகலவான வர்த்தகர்கள் தென் பகுதியில் இருந்து மன்னாரிற்கு வந்து பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மன்னாரில் பண்டிகைக்கால வியாபார நடிவடிக்கைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
எனினும் பண்டிகைக்கால வியாபாரங்கள் மேற்கொள்ளும் பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூரை ஏற்படுத்தாத வகையில் குறித்த வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னார் நகரசபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகலவான பணத்தை குத்தகையாக கொடுத்து இடத்தை பெற்றுள்ள வர்த்தகர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என தென்பகுதி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
-கடந்த வருடம் குத்தகையினால் சுமார் 75 இலட்சம் ரூபாவினை மன்னார் நகர சபை வருமானமாக பெற்றிருந்தது.
எனினும் இம்முறை குத்தகையினால் ஒரு கோடியே 2 இலட்சத்து 41 ஆயிரம் ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளதாக நகரசபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனோல்ட் தெரிவித்துள்ளனர்.
பண்டிகைகால வியாபார நடவடிக்கை இடம் பெறுகின்ற பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் சூடு பிடித்துள்ள பண்டிகைக்கால வியாபாரம்.(photos)
Reviewed by Author
on
December 23, 2017
Rating:

No comments:
Post a Comment