அண்மைய செய்திகள்

recent
-

வட்டார தேர்வில் 10 சதவீத பெண் பிரதிநிதித்துவம் 50 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும்- வேட்பாளர் கோ.அஞ்சலா-(படம்)



உள்ளூராட்சி மன்றங்களுக்கான கலப்பு தேர்தல் முறையில் 25 வீதம் பெண்களுக்கான ஒதுக்கீடு என்பது பெண்களின் உரிமைக்காக போராடும் அமைப்புக்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும்.

இருந்தாலும் இது நேரடி வட்டாரங்களில் 10 வீதமாக  ஆக குறைந்திருப்பது பெண்களுக்கான அநீதியாகும். நேரடி வட்டார தேர்தல் முறையில் 50 வீதமான வட்டாரங்கள் பெண்களுக்கென ஒதுக்கீடு செய்ய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக வவுனியா பிரதேச சபை , மருதமடு வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரான கோ.அஞ்சலா தெரிவித்தார்.

நேற்று (23) ஓமந்தை பனிக்க நீராவியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,

விகிதாசார பட்டியலில் பெண் வேட்பாளர்கள் 50 வீதம் என்பது ஏமாற்றும் நடவடிக்கையே. அது எமது போராடும் மனநிலையை மழுங்கடிக்கச் செய்யும்.

கட்சிகள் தாம் விரும்பிய, செல்வாக்கு செலுத்துகின்ற வேட்பாளர்களை வாக்காளர்களின் விருப்புக்கு மாறாக நியமிக்க இடம் கொடுக்கின்றது. அல்லது 50 வீதமான வட்டாரங்கள் பெண்களுக்காக மட்டும் என உருவாக்கப்பட வேண்டும்.

பெண் சமத்துவம் பேணப்படவும் அவர்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நடைமுறையே பலன் தரக்கூடியதாகும்.

ஆண்கள் அதிகளவு அங்கம் வகிக்கின்ற, நிர்வகிக்கின்ற கிராம அபிவிருத்திச் சங்கங்களை விட மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களே சிறப்பான முறையில் நாடு பூராகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

 மாதர் சங்கங்களூடாக சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காக அவர்களால் கடினமாக உழைக்க முடியுமென்றால் ஏன் அரசியலில் சாதித்துக் காட்டமுடியாது?ஏன் அரசியல் தலைமைத்துவத்தை பெண்களுக்கு பிரதேச ரீதியாக வழங்க முடியாது? கட்சி பேதமின்றி என்னைப்போன்ற பெண்வேட்பாளர்களை உங்கள் முதல் தெரிவாக்கிக்கொள்ளுங்கள்.

ஒரு தையல் மெசினையும், பென்சில், கொப்பிகளை வழங்கிவிட்டு வாழ்வாதாரத்துக்கு வசதி செய்து கொடுத்து விட்டதாக பிதற்றிக்கொண்டு வாக்குகளை அபகரித்துச் செல்ல பல அரசியல்வாதிகள் வருகின்றார்கள்.

இந்த நிலமை மாற்றப்பட வேண்டும். பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் ஏழ்மையை வாக்குகளாக மாற்ற நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட பெண்கள் தயாராக வேண்டும்.

யுத்த பேரவலத்தால் நடுத்தெருவில் விடப்பட்டிருப்பவர்கள் பெண்கள்தான்.

 தனித்து விடப்பட்டவர்களும் அவர்கள்தான். அவர்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை.

 தொழில்வாய்ப்புக்கள் இல்லை, பொருளாதார உயர்ச்சிக்கான திட்டங்கள் இல்லை, வாய்ப்பேச்சளவில் தான் எல்லாமே இருக்கின்றது.

தூய்மையான ஊழலற்ற நிர்வாகத்தையும், அரசியலையும் செய்யக்கூடிய ஆற்றல் பெண்களிடம் உண்டு.

 கடந்த காலங்களில் அந்த வாய்ப்புக்கள் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன, இனியும் நாம் அமைதியாக இருக்க முடியாது. எங்கள் பாதுகாப்பினை அரசியல், சமூக ரீதியாக உறுதிப்படுத்த அரசியல் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பெண்களுக்கே வாக்களிப்போம் என ஒவ்வொரு பெண் வாக்காளர்களும் சிந்தித்தால், அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டால் பெண்களுக்கெதிரான அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிய முடியும்.

 பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முடியும். என்னையும் என்னைப்போன்ற பெண் வேட்பாளர்களையும் தெரிவு செய்து பெண் உரிமைக்காகவும் பிரதேச அபிவிருத்திக்காகவும் குரல் கொடுக்க ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.


வட்டார தேர்வில் 10 சதவீத பெண் பிரதிநிதித்துவம் 50 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும்- வேட்பாளர் கோ.அஞ்சலா-(படம்) Reviewed by Author on January 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.