ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போது சுயநினைவுடன் இருந்தாரா? நீதிபதி சரமாரி கேள்வி! -
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இன்று அப்போலோ டாக்டர் சத்யபாமா ஆஜரானார். அவரிடம் ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போது சுயநினைவுடன் இருந்தாரா?, அவரை முக்கிய பிரமுகர்கள் யார் யார் பார்த்தனர் என நீதிபதி சரமாரி கேள்வி கேட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், முதற்கட்டமாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதை கண்காணிக்க அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவினரிடம் விசாரணை நடத்தியது.
அதன்படி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் நாராயணபாபு, முன்னாள் மருத்துவ கல்வி இயக்குனர் விமலா, முத்துச்செல்வன், கலா, தர்மராஜன், முன்னாள் எம்எம்சி டீன் முரளிதரன், அரசு டாக்டர் பாலாஜி உள்ளிட்டோரை தனி, தனியாக அழைத்து நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் சிகிச்சைக்காக கண்காணிக்க அமைக்கப்பட்ட அரசு டாக்டர்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஆனால், டாக்டர் பாலாஜி மட்டுமே ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அவர் தான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த டாக்டர்களை அறிமுகப்படுத்தியதாகவும் கூறினார்.
அவரது வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்கும் படி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு டாக்டர் பாலாஜி வரும் 11ம் தேதி நீதிபதி முன் நேரில் ஆஜராகி, தனது வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க உள்ளார். இந்த நிலையில், அப்போலோ டாக்டர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்து, கடந்த 26ம் தேதி அப்போலோ டாக்டர் சத்யபாமாவுக்கு ஆணையம் அழைப்பாணை அனுப்பியது. அதன்பேரில், இன்று(04) காலை 10.30 மணிக்கு அப்போலோ டாக்டர் சத்யபாமா நீதிபதி ஆறுமுகச்சாமி முன்பு ஆஜரானார். அவரிடம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீதிபதி விசாரணை நடத்தினார்.
அப்போது, ஜெயலலிதா எந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்?, சுயநினைவுடன் இருந்தாரா?, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அப்போலோவுக்கு வந்த டாக்டர்கள் யார்?, அவர்கள் என்ன மாதிரியான சிகிச்சைகள் அளித்தனர்? ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்த போது அவர்களை பார்க்க வந்த முக்கிய பிரமுகர்கள் யார்? யார்?, அப்போலோ மருத்துவமனையில் அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் யார்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிபதி சரமாரி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு டாக்டர் சத்யபாமா பதில் அளித்ததாக கூறப்படுகிறது. அவரது பதிலை வாக்குமூலமாக நீதிபதி பதிவு செய்து கொண்டார். இதை தொடர்ந்து அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ டாக்டர்களிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. வரும் நாட்களில் அப்போலோ டாக்டர்கள் ஒவ்வொருவராக அழைத்து தனித்தனியே விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போது சுயநினைவுடன் இருந்தாரா? நீதிபதி சரமாரி கேள்வி! -
Reviewed by Author
on
January 05, 2018
Rating:

No comments:
Post a Comment