கூலி வேலைக்கு செல்லும் இந்திய அணியின் கேப்டன் -
இந்திய அணி தலைவர் என்றால் உடனே இந்திய கிரிக்கெட் அணி தலைவர் என நினைக்கும் வகையில் தான் இந்தியாவில் உள்ள மற்ற விளையாட்டுகளின் நிலை உள்ளது.
கிரிக்கெட் விளையாட்டுக்கு செலவிடும் தொகையில் கால் பங்கு கூட பிற விளையாட்டுக்களை மேம்படுத்த செலவிடப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது.
அதனை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவரான தேவசித்தம் என்பவரின் வாழ்க்கை.
சிறுவயதிலிருந்தே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவராக விளங்கிய தேவசித்தம், பிற இளைஞர்களை போல கிரிக்கெட், கால்பந்து என்று அனைவரும் அதிகம் விரும்பும் விளையாட்டில் ஈடுபாடு காட்டாமல் அதிகம் பிரபலம் இல்லாத 'லங்கடி' எனும் விளையாட்டில் ஆர்வம் காட்டினார்.
நொண்டி அடித்தவாறு அடுத்தவர்களை தொடுதல் இந்த விளையாட்டின் சிறப்பம்சமாகும்.
கர்நாடகாவில் 2012ம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான லங்கடி விளையாட்டு போட்டியில் இவரது தலைமையிலான தமிழக அணி முதல் இடம் பிடித்தது.
பின்னர் 2013ம் ஆண்டு, தமிழ்நாட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான லங்கடி, விளையாட்டில் இவரது தலைமையிலான தமிழக அணி மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.
இதில் சிறந்த விளையாட்டு வீரர் விருதினையும் பெற்று இந்திய அணியின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்து ஆசிய அளவில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் இவர் தலைமையிலான இந்திய அணி தங்கப் பதக்கம் பெற்று அசத்தியது.
அனைத்துக்கும் மகுடம் போன்று 2017ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலககோப்பைக்கான லங்கடி போட்டியில் இவரது தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்றது.
இத்தனை சாதனைகளை தன் வசம் வைத்துள்ள தேவசித்தம் குடும்ப வாழ்வாதாரத்திற்காக தற்போது விவசாயம் மற்றும் கூலி வேலை போன்றவற்றை நம்பியுள்ளார் என்பது வேதனை தரும் ஒன்றாகும் .
என்னதான் வறுமை வாட்டினாலும் குடும்பத்திற்காக ஒரு பக்கம் வேலை செய்துகொண்டே மறுபக்கம், அவர் கிராமத்தில் இருக்கும் பள்ளி சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் லங்கடி விளையாட்டை தினமும் பயிற்சி அளித்து வருகிறார். தனது விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தால் இதை செய்துவருவதாக கூறுகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அழைத்து பாராட்டியதோடு முதலமைச்சரின் நேரடி வேலைவாய்ப்பில் வழங்கப்படும் முதல் தர கவுரவ அந்தஸ்து பதவியும், உயரிய ஊக்க தொகையும் வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்து உள்ளார்.
ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றபடவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் அவரது குடும்பத்தினர்
தற்பொழுது நமது இந்திய லங்கடி அணியின் கேப்டனாக இருந்து பல வெற்றிகளை பெற்ற தேவசித்தம் போன்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவரை போன்றே பலராலும் அறியப்படாத மற்ற வீரர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.
கூலி வேலைக்கு செல்லும் இந்திய அணியின் கேப்டன் -
Reviewed by Author
on
February 15, 2018
Rating:

No comments:
Post a Comment