தன் சொந்த நிலத்தை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு வழங்கிய சசிகலா கணவர் நடராஜன்!
மூன்று தசாப்த காலமாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் பொருட்டு தமிழ்நாடு, தஞ்சாவூர் அருகே அமைக்கப்பட்ட நினைவு முற்றத்திற்கு தனது சொந்த ஊரான விளாரில் உள்ள நிலத்தை சசிகலாவின் கணவர் ம.நடராஜன் வழங்கியுள்ளார்.
ஈழத்தில் இடம்பெற்ற யுத்தம் 2009இல் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டதன் பின்னர், யுத்தத்தின்போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக தஞ்சாவூர் திருச்சி நான்குவழிச் சந்தியோரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த நினைவு முற்றத்தின் நிர்மானப் பணிகள், 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி தொடங்கப்பட்டுள்ளன.
வைகோ மற்றும் நல்லக்கண்ணுவால் இந்த நினைவு முற்றத்தின் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
முதலில் ஒரு நினைவுத் தூணாக மட்டுமே அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்த நினைவு முற்றம், பிறகு இலங்கையில் தமிழர் நினைவிடங்களுக்கு நிகழ்ந்த அவலங்களால் தமிழர்கள் அதிகளவில் அழிக்கப்பட்ட இலங்கை உள்நாட்டுப்போரின் நினைவுச் சின்னமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் போரை நினைவுபடுத்தும் வகையிலும், இலங்கையில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை விளக்கும் வகையிலும், முழுவதும் கருங்கற்கள் கொண்டு வடிக்கப்பட்ட சிற்பங்கள், போரை நிறுத்த வலியுறுத்தி உலகத்தின் பல பகுதிகளில் தீக்குளித்து உயிரிழந்த தமிழர்களின் சிற்பங்கள், ஓவியங்கள், தமிழுக்குத் தொண்டு செய்தவர்களின் அரிய புகைப்படங்களைக் கொண்டு இந்த நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது.
பழ. நெடுமாறனின் முயற்சியில், உலகத் தமிழர் பேரவையால் மேற்கொள்ளப்பட்ட இத் திட்டப்பணி, பேரவை மற்றும் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறனின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பழ. நெடுமாறனுடன் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைப்பதற்கு முழு துணையாக நடராஜன் இருந்துள்ளார்.
குறித்த நினைவு முற்றத்திற்கு நிலம் வழங்கியதுடன், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்காக நடராஜன் தனக்கு சொந்தமான ரோலக்ஸ் கடிகாரம், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை மேடையில் 45 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்து, அந்த பணத்தை பழ.நெடுமாறனிடம் வழங்கியுள்ளார்.
மேலும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை திறப்பதற்கு பொலிஸார் அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்ற அனுமதியுடன், 2013 ஆம் ஆண்டு, நவம்பர் 8ஆம் திகதி திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக நவம்பர் 6ஆம் திகதியே குறித்த முற்றம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவு முற்றத்தின் திறப்பு விழாவிற்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்துள்ளார், நிகழ்ச்சியின் போது பேசிய ம. நடராஜன் இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்.
இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன், இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன் என குறிப்பிட்டிருந்தார்.
தன் சொந்த நிலத்தை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு வழங்கிய சசிகலா கணவர் நடராஜன்!
Reviewed by Author
on
March 21, 2018
Rating:

No comments:
Post a Comment