இலங்கை எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா -
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட 30/1 யோசனையை செயற்படுத்துவது சம்பந்தமான பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை தாமும் ஏற்றுக்கொள்வதாக அமெரிக்கா இன்று ஜெனிவாவில் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் பொறுப்புக் கூறல், பாதுகாப்பு தரப்பினரின் மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்லது, மத, சிறுபான்மை இனத்தவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் சித்திரவதை மற்றும் வன்முறைகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
இந்த நிபந்தனைகளுக்கு இலங்கை வழங்கிய ஒத்துழைப்பு சம்பந்தமாக அமெரிக்கா திருப்தியடைவதாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் உரையாற்றிய அமெரிக்க பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தரப்பை சேர்ந்த அதிகாரிகளின் தவறான செயற்பாடுகள், சிறுபான்மை மதத்தினர் மற்றும் சிறுபான்மையினரை இலக்கு வைத்து அண்மையில் நடந்த தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக அவதானிப்புடன் இருந்து வருவதாகவும் அமெரிக்க பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், சிறுபான்மை மதத்தினர், அவர்களின் வழிபாட்டு தலங்களை பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட 34/1 யோசனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள 30/1 யோசனைகள் அடங்கிய பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கையை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போருக்கு பின்னரான நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் போரில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக கடந்த 2015 ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனை 30/1 என பெயரிடப்பட்டுள்ளதுடன் கடந்த வருடம் மார்ச் மாதம் முன்வைக்கப்பட்ட அறிக்கை 34/1 என குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்காவும் இலங்கையும் இணை அனுசரணையின் கீழ் முன்வைக்கப்பட்ட 34/1 யோசனையின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கைக்கு இரண்டு ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா -
Reviewed by Author
on
March 22, 2018
Rating:

No comments:
Post a Comment