அதுவே பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு மருந்தாக அமையும்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 37ஆவது கூட்டத் தொடர் சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.
இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அந்த அறிக்கையின் மீது மேலும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளன ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மனின் நகர்வுகள்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 36ஆவது கூட்டத் தொடர், கடந்த வருடம் நடைபெற்றது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தவும் அது சார்ந்த வெளிப்படுத்தல்களுக்காகவும் கொழும்புக்கு இரண்டு வருடகால அவகாசம் கொடுக்கப்பட்டது.
அவகாசத்தில் பாதிப்பகுதி முடிவடைந்த நிலையில் 37ஆவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில், போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மீதான நகர்வுகள் எந்தக் கட்டத்தில் உள்ளன என்று இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பப்படும். அதேநேரத்தில் இலங்கை தொடர்பில் தனது நிலைப்பாட்டையும் வாய்மொழி மூலமான அறிக்கையாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் 21ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளார்.
ஐ.நா. உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன், இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது, அரச தலைவர் மைத்திரி – தலைமை அமைச்சர் ரணில் தலைமையிலான கூட்டு அரசின் மீது தனது அதிருப்தியை வலுவாகப் பதிவுசெய்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் கூட்டுஅரசுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு, புதிய அரசமைப்பு முயற்சியை வலுவாகப் பாதித்துள்ளது.அரசமைப்பை நிறைவேற்றக்கூடிய வகையில் கூட்டுஅரசு தற்போது செயற்படவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களிலும் கூட்டு அரசு ஆர்வம் காட்டவில்லை என்று எடுத்தியம்பியுள்ளது.
கூட்டமைப்பு. கூட்டுஅரசு இவை விடயத்தில் தடம்மாறாது பயணிக்க, பன்னாட்டுச் சமூகத்தின் அழுத்தம் அவசியம் என்ற கோரிக்கையையும் அது முன்வைத்துள்ளது. கூட்டமைப்பின் குற்றச்சாட்டுச்களை ஏற்றுக்கொண்டுள்ள ஐ.நா. உதவிச் செயலர், நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 37ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கையின் மூலம் கொழும்பு மீதான பன்னாட்டுச் சமூகத்தின் நிலைப்பாடு வெளிப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்த ஜெப்ரி பெல்ட்மன், 2015ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் கூட்டுஅரசு செயற்படக்கூடாது (இதே கருத்தை ஜனாதிபதியிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார்) என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆக, கூட்டமைப்புக்கும் பெல்ட்மனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பும், அதில் காண்பிக்கப்பட்ட வெளிப்படுத்தல்களையும், பெல்மனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பையும் எடுத்து நோக்கினால், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை தொடர்பில் வெளிப்படுத்தவுள்ள வாய்மொழிமூல அறிக்கை கொழும்புக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும்படியாகவே அமையும் என்பது தெளிவாகிறது.
ஆனால் வெறும் அறிக்கையுடன் தமது கடமையை முடித்துக் கொள்ளாது, அதற்கு அப்பாலும் சென்று தனது அழுத்தத்தையும் நகர்வுகளையும் கொழும்பு மீது பன்னாட்டுச் சமூகம் வலுவாக வைக்க வேண்டும். அதுவே ஈழத் தமிழ் மக்களின் கடந்த கால கசப்பான பதிவுகளுக்கு மருந்தாக அமையும். எதிர்கால இருப்புக்கும் வழி சமைக்கும்.
அதுவே பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு மருந்தாக அமையும்!
Reviewed by Author
on
March 12, 2018
Rating:
Reviewed by Author
on
March 12, 2018
Rating:


No comments:
Post a Comment