கிளிநொச்சியில் 14ஆயிரத்து 415 குடும்பங்களுக்கான வீட்டுத்தேவைகள் காணப்படுகின்றன -
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 14ஆயிரத்து 415 குடும்பங்களுக்கான வீட்டுத்தேவைகள் காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்றைய தினம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது அறிமுக உரையாற்றிய அரச அதிபர்,
மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு 41ஆயிரத்து 246 வீடுகள் அமைத்துக்கொடுக்கவேண்டிய தேவை காணப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு வரையும் இருபத்தி ஐயாயிரத்து 564 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இதனைவிட கடந்த ஆண்டிலே 867 வீடுகளுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இவை தவிர மாவட்டத்தில் 14ஆயிரத்து 415 வீடுகளின் தேவைகள் காணப்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சு ஏழாயிரம் வரையான வீடுகளை 2018ஆம் ஆண்டிலிருந்து இருந்து அமைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
எனினும் இது தொடர்பில் இறுதியான கலந்துரையாடல்கள் எதுவும் நடைபெறவில்லை. இந்த ஏழாயிரம் வீடுகளையும் எந்தப் பிரதேசங்களிலும் அமைக்க வேண்டும் என்ற முடிவுகளை எடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதுதொடர்பில் பிரதேச செயலாளர்கள் விரைவாக செயற்பட வேண்டும் என்றும் அதேபோல் மீள்குடியேற்ற அமைச்சின் நீண்ட காலமாக இடம்பெயர்ந்தவர்களுக்கான செயலணி மூலமாக 50 வீடுகள் 2018ஆம் ஆண்டில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதைத்தவிர தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முன்மொழிவுகளின் அடிப்படையில் 171 வீடுகளை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் 14ஆயிரத்து 415 குடும்பங்களுக்கான வீட்டுத்தேவைகள் காணப்படுகின்றன -
Reviewed by Author
on
April 05, 2018
Rating:

No comments:
Post a Comment