எங்கள் உரிமைகளை தடுப்பதற்கு எவருக்கும் அனுமதியில்லை! முதலமைச்சர் விக்னேஸ்வரன்
தமிழ் மக்கள் பேரவையின் கலந்தரையாடல் இன்று (26) யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எமது நடவடிக்கைகளுக்குத் தீர்வாக இளைஞர்களையும் யுவதிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற கருத்தினை முன்னரே ஏற்றுக்கொண்டிருந்தோம். அதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
தமிழ் மக்கள் பேரவைக்கென ஒரு யாப்பு இதுவரையில் தயாரிக்கப்படவில்லை. அந்த யாப்பின் அடிப்படையில் ஏனைய நடவடிக்கைகளுக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்று உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். யாப்பு உருவாக்குவது தொடர்பில் உடனடியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் பலர் கலந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் பல பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறினார்கள். அவற்றிற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும், இதுவரை காலமும் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் அந்த பிரச்சினைக்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. அந்த செயற்பாடுகள் மனவருத்தத்தினை தருவதாகவும் கூறியுள்ளார்கள்.
கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் பிரச்சினைக்குரிய நடவடிக்கைகள் வேறுவிதமாக இருக்கும். எனவே, அங்கிருந்து வரும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வர தீர்மானித்துள்ளோம்.
அரசியல் ரீதியாக எமது இளைஞர்கள் மத்தியில் எவ்வாறான விடயங்களை கொண்டு சேர்க்க வேண்டுமென்று சில செயற்பாடுகள் உள்ளன. காலாதி காலமாக தமிழ் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடகிழக்கு இணைப்பு மற்றும் சுயாட்சி ஆகியவை புலப்பட்டு வந்துள்ளன.
ஆனபடியால், இவற்றின் முக்கியத்துவத்தினை பொது மக்களுக்கும், இளைஞர் யுவதிகளுக்கு எடுத்து இயம்ப வேண்டும். கொள்கைகள் ஒருவிதமாக இருக்க அவற்றினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தான் எமக்குள் பல பிரச்சினைகள் இருக்கின்றன.
கொள்கைகளில் எமக்கு மாற்றம் இல்லை. முரண்பாடுகள் இல்லை. அவற்றினை அடையலாமா அல்லது அடைய முடியாதா எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என்பது சம்பந்தமாக பிரச்சினைகள் இருக்கின்றன.
இவற்றினை அடையாளப்படுத்தி தமிழ் மக்கள் பேரவை என்ற முறையில் கொள்கைகளுக்கு முக்கிய இடம் அளித்து எமது நடவடிக்கைகளை எடுத்துச் செல்ல வேண்டும். மிக விரைவில் யாப்பு தயாரிக்கப்பட்டதன் பின்னர் ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.
இதேவேளை, மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தன்று வடமாகாண கொடியினை அரைக்கம்பத்தில் பறக்க விட்டமை தொடர்பாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் முதலமைச்சர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் தொடர்பாக பல சர்ச்சைக்குரி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.
அந்த விடயம் தொடர்பாக முதலமைச்சரிடம் கேட்ட போது அதற்கு பதில் வழங்கிய அவர்,
வடமாகாணத்தில் நடப்பவற்றிற்கு நாமே பொறுப்பானவர்கள். எமக்கு மற்றவர்கள் கூற வேண்டிய அவசியமில்லை. எமக்கு இருக்கும் அதிகாரங்களை குறைத்து விட்டு மேலும் அந்த அதிகாரங்களைத் தாங்கள் எடுக்க நினைக்கின்றார்களோ தெரியவில்லை.
அவர்களின் கருத்துக்களுக்கு எமக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை. எமது மாகாணத்தில் நடக்கும் சம்பவங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் உரிமை எமக்கே உண்டு. அவற்றினைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அன்று பல சர்ச்சையான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வடமாகாண சபை ஒழுங்கமைப்பில் நடைபெற்றதா? அல்லது பல்கலைக்கழக மாணவர்கள் தலைமையில் நடைபெற்றதா என மீண்டும் கேள்வி எழுப்பியபோது, நினைவேந்தலில் பல சர்ச்சையான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், எதிர்வரும் வருடம் 10வது வருடம் என்றபடியால், மக்கள் அனைவரும் இணைந்து செய்யக்கூடிய வகையில் தற்போதிலிருந்தே, அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றோம். கடந்த நினைவஞ்சலியின் போது பல குறைபாடுகள் இருந்தாக சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
எதிர்வரும் வருடம் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்வில் அந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும். கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கி ஊழியர்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
வங்கிகளிற்கு ஒரு விதிமுறைகள் உள்ளது. அந்த விதிமுறைகளுக்கு அமைவாக அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
வடமாகாண சபை மற்றும் அதன் மக்கள் தமது மனோநிலைகளை வெளிப்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதன் அடிப்படையில் அந்த நினைவஞ்சலி நிகழ்வில் ஏற்பட்ட சில குறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். அதனடிப்படையில் சில முடிவுகளை முன்னெடுக்கப்படுமென்றார்.
எங்கள் உரிமைகளை தடுப்பதற்கு எவருக்கும் அனுமதியில்லை! முதலமைச்சர் விக்னேஸ்வரன்
Reviewed by Author
on
May 27, 2018
Rating:

No comments:
Post a Comment