கிம் ஜாங் உன் சந்திப்புக்கு சிக்கல்: வடகொரியாவின் திடீர் முடிவால் பதற்றம் -
அமெரிக்கா, தென்கொரியா இணைந்து நடத்திய ராணுவ பயிற்சி காரணமாக இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது.
அமெரிக்கா, தென்கொரியா இணைந்து நடத்தி வரும் ராணுவ பயிற்சி மேலும் தொடர்ந்தால் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் சந்திப்பில் இருந்து வடகொரியா விலக நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக படிப்படியாக அண்டை நாடுகளுடன் நல்லிணக்கம் பேண வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது வடகொரியாவின் இந்த முடிவு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவில் ஊடுருவும் திட்டமே தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவத்தின் கூட்டுப் பயிற்சியின் முக்கிய நோக்கம் என கருதுவதாக வட கொரியாவின் செய்தி முகமை தெரிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சிங்கப்பூரில் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோரின் பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறுமா என்பது சந்தேகமே என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பன்முன்ஜோம் கிராமத்தில் புதன்கிழமை வட, தென்கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரியப்போரை அதிகாரப்பூர்வமாகவும், முறைப்படியும் முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றியும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தென்கொரியா உடன் இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது.
அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி வடகொரியா உடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது.
முன்னதாக கடந்த மாதம் 27-ஆம் திகதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் தென்கொரியாவின் ஜனாதிபதி மூன் ஜே இன் ஆகியோர் எல்லையில் அமைந்துள்ள பன்முன்ஜோம் கிராமத்தில் உள்ள அமைதி இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கிம் ஜாங் உன் சந்திப்புக்கு சிக்கல்: வடகொரியாவின் திடீர் முடிவால் பதற்றம் -
Reviewed by Author
on
May 16, 2018
Rating:

No comments:
Post a Comment