பதவி விலக நான் தயார்! வடமாகாண சபையில் பா.டெனீஸ்வரன்
அநீதியாக என்னை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் முயற்சித்தமையினாலேயே நான் முதலமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் சென்றேன் என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இப்போதும் முதலமைச்சர் எனது 3 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் நான் பதவி விலக தயாராக உள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண சபையின் 129ஆவது அமர்வு பேரவை செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.
இதன்போது அமைச்சர்கள் விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சபைக்குக் கொண்டு வந்த விசேட கருத்துரை மீதான விவாதத்தின்போதே டெனிஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இங்கே உரையாற்றிய சிலர் முதலமைச்சர் மட்டுமா விட்டுக் கொடுக்கவேண்டும், ஏன் அமைச்சர் டெனீஸ்வரன் விட்டுக் கொடுத்து பதவி விலகினால் என்ன? என கேள்வி எழுப்புகிறார்கள்.
எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லாமல் அநீதியாக என்னை பதவி நீக்கம் செய்வதற்கு முதலமைச்சர் முயற்சித்தமையினாலேயே நான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தேன். ஆகவே நான் விட்டுக் கொடுப்பதற்கு இயலாது.
அதேவேளை முதலமைச்சர் தாம் செய்தது தவறு என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொள்ளவேண்டும். மேலும் முன்னாள் போராளிகளுக்கு உதவும் வகையில் நான் அமைச்சராக இருந்த காலத்தில் செய்த செயற்றிட்டங்களை நான் அமைச்சு பதவியிலிருந்து நீங்கிய பின்னர் கைவிட்டுள்ளார்கள்.
அதனை தொடர்ந்து செய்யவேண்டும். அடுத்ததாக மிக நீண்டநாட்கள் மிகுந்த சிரமப்பட்டு வடமாகாண போக்குவரத்து நேர அட்டவணை ஒன்றை தயாரித்திருந்தேன்.
அந்த நேர அட்டவணையும் கூட நான் அமைச்சு பதவியிலிருந்து நீங்கிய பின்னர் கைவிடப்பட்டிருக்கின்றது. அதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த 3 நிபந்தனைகளையும் நடைமுறைப்படுத்தினால் நான் இப்போதும் பதவி விலகுவேன்.
முதலாவது நிபந்தனையை முதலமைச்சர் நடைமுறைப் படுத்தாவிட்டாலும் மிகுதி 2 நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தினால் கூட நான் பதவி விலகுவேன் என குறிப்பிட்டார்.
பதவி விலக நான் தயார்! வடமாகாண சபையில் பா.டெனீஸ்வரன்
Reviewed by Author
on
August 10, 2018
Rating:

No comments:
Post a Comment