முல்லைத்தீவில் நள்ளிரவில் பதற்றம்....இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு -
முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று நள்ளிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது மீனவர்களின் பெறுமதியான 3 படகுகள், பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள், 8 வாடிகள் மற்றும 2 இஞ்சின்கள் உள்ளிட்ட தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் 25 படகுகளை வைத்து, கொழும்பில் உள்ள அமைச்சர் ஒருவரின் உதவியுடன் சட்டத்திற்கு முரணான வகையில் மீன்பிடித்து வந்துள்ளார்.
மின்பிறப்பாக்கிகளைக் கொண்டும், டைனமைட் பயன்படுத்தியும் சட்டத்திற்கு விரோதமாக இவர் மீன்பிடித்து வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், நேற்றைய தினம் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்திருந்த மீன்பிடித் துறை அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சாவிடம் இது தொடர்பில் மக்கள் முறையிட்டதன் பிரகாரம் இதனை உடன் நிறுத்துவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
அத்துடன் இனி சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப பெரும்பான்மை இனத்தவர்களைச் சேர்ந்தவர்கள் மீன்பிடிப்பார்கள் எனவும் அமைச்சர் இதன்போது மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
எனினும், இன்று மாலை மீண்டும் குறித்த பெரும்பான்மை இனத்தவர் அதே போல சட்டத்திற்கு முரணான முறையில் மீன்பிடிக்கச் செல்ல முற்படும்போது, அப்பகுதி மீனவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், போராட்டம் நடத்தி அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் இன்று நள்ளிரவு இவ்வாறு தமிழ் மீனவர்களின் பெறுமதியான உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக மீனவர்களின் பொருட்கள் குறித்த பெரும்பான்மை இனத்தவரின் நாசகார வேலையால் தீக்கிரையாக்கப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் ஆணித்தரமாக தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் அறிந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் உடன் உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டதுன், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்து அப்பகுதியில் பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளார்.
மேலும், முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவிக்கப்பட்டதுடன், தீ அணைக்கப்பட்டு தளத்தில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவில் நள்ளிரவில் பதற்றம்....இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு -
Reviewed by Author
on
August 14, 2018
Rating:

No comments:
Post a Comment