எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு சொந்தக்காரர் சம்பந்தன் மட்டுமே!
நாடாளுமன்ற சம்பிரதாய மற்றும் ஜனநாயக அடிப்படையில் எதிர்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடமே இருக்க வேண்டும் என்றும் அதைப் பறிக்க நினைப்பது பெரும் ஜனநாயக மீறலாகும் எனவும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
எதிர்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கு சம்பந்தனுக்கு இருக்கின்ற அரசியல் உரிமை தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மஹிந்த அணி நல்லாட்சியைக் கவிழ்ப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்து வருகின்றது. அவர்களின் சதிகளில் ஒன்றுதான்
கூட்டமைப்பின் சம்பந்தனிடம் இருக்கின்ற எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்கும் முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சி ஜனநாயக மீறலாகும். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுள் ஆட்சியில் பங்கெடுக்காத அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள கட்சிக்குத்தான் எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும்.
அந்த வகையில் ஆறு கட்சிகள் மாத்திரமே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அவற்றுள் ஐக்கியத் தேசிய கட்சி, ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்றும் அரசுக்குள் இருக்கின்றன.
ஏனைய மூன்று கட்சிகளான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜேவிபி மற்றும் ஈபிடிபி ஆகிய கட்சிகள் எதிர்கட்சிகளாக உள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தக் கட்சிகளுள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களையும் , ஜேவிபி 6 ஆசனங்களையும் மற்றும் ஈபிடிபி ஓர் ஆசனத்தையும் கொண்டுள்ளன.
நாடாளுமன்ற சம்பிரதாயத்தின்படி அதிக ஆசனங்களைக் கொண்ட கூட்டமைப்புக்குத்தான் எதிர்கட்சித் தலைவர் பதவி செல்லும். அதன்படி, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்த அணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். அந்தக் கட்சியுடன் சண்டை பிடித்துக் கொண்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர். அது அவர்களின் பிரச்சினை. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போய் அமரட்டும். அதற்காக அவர்கள் எதிர்கட்சித் தலைவர் பதவியைக் கோர முடியாது எனவும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு சொந்தக்காரர் சம்பந்தன் மட்டுமே!
Reviewed by Author
on
August 09, 2018
Rating:

No comments:
Post a Comment