'மகிழம்பூவும் அறுகம் புல்லும்' நாவல் வெளியீட்டு விழா.
இலண்டன் வாழ் படைப்பாளி தீபதிலகை எழுதிய 'மகிழம்பூவும் அறுகம் புல்லும்' நாவலின் வெளியீட்டு விழாவானது 12.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு ஈழத்தின் வவுனியாவில் அமைந்துள்ள சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் ஆரம்பமானது.
வவுனியா தமிழ் விருட்சம், எஃப்.எம்.ஈ ஊடகக் கல்லூரி, வள்ளுவர்புரம் செல்லமுத்து வெளியீட்டகம் என்பன இணைந்து நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தன. நிகழ்வுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீட பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமை வகித்தார். ஐக்கிய நாடுகளின் மேற்கு ஆபிரிக்க முகாமைத்துவ நிபுணர் விஜயகுமார் நவனீதன் பிரதம அதிதியாக பங்கேற்றார். முன்னதாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. வரவேற்பு நடனத்தினை சுஜித்தா திற்றம்பலம் அவர்களின் நடன மாணவிகள் வழங்கினர். வரவேற்புரையினை வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் கவிஞர் மாணிக்கம் ஜெகன் வழங்கினார். தலைமையுரையினைத் தொடர்ந்து வாழ்த்துரையினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வழங்கினார்.
அறிவிப்பாளர் இராஜேஸ்வரன் அவர்களின் தொகுப்பில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் நூலினை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் தமிழ்மணி அகளங்கன் வெளியிட முதற்பிரதியினை வவுனியாவினைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் ஜெயகெளரி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கலந்துகொண்டோர் நூலின் பிரதிகளைப் பெற்றனர். நிகழ்வின் இன்னுமொரு அம்சமாக இந்திய, புலம்பெயர் படைப்பாளர்கள் கெளரவிப்பும் இடம்பெற்றது. யோ.புரட்சி தொகுப்பில் வவுனியா தமிழ் விருட்சம் தொண்டமைப்பு தலைவர் சந்திரகுமார் கண்ணன், அறிவிருட்ஷம் துரித கல்வி சமூக மேம்பாடு பணிப்பாளர் ஐ.எம்.சுரைஸ் ஆகியோர் இக்கெளரவிப்பினை ஏற்பாடு செய்திருந்தனர். இலண்டன் தீபதிலகை, இலண்டன் வாழ் இத்தாலி தனு, கனடா நிலா இராஜரட்னம், இந்தியா, தமிழ்நாடு மதுரை எழுத்தாளர் சோழ.நாகராஜன், தமிழ்நாடு மதுரை மனிதநேயச் செயற்பாட்டாளர் வின்சென்ட் மனோகரன் ஆகியோர் இக்கெளரவத்தினை பெற்றுக்கொண்டனர். புத்தளம் ஸாகிறா தேசிய பாடசாலை மாணவன் சிஹாப் அல்ஜின் அவர்களினால் பாடல் இசைக்கப்பட்டது.
நூலாய்வினை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் ந.பார்த்தீபன் நிகழ்த்தினார். வாழ்த்துக் கவியினை மட்டக்களப்பு அலிகார் தேசிய கல்லூரி ஆசிரியர் கவிஞர் ஏரூர் நெளஷாத் வழங்கினார்.
பிரதம விருந்தினர் உரையினை ஐக்கிய நாடுகளின் மேற்கு ஆபிரிக்க முகாமைத்துவ நிபுணர் விஜயகுமார் நவனீதன் ஆற்றினார். இந்தியப் படைப்பாளிகள் சார்பில் மதுரையைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் வின்சென்ட் மனோகரன் கருத்துரை அளித்தார். இந்நிகழ்விற்காக கனடா தேசத்திலிருந்து வாழ்த்துதல் வழங்கிய ஏகநாயகவல்லி சிவராசசிங்கம் அவர்களின் வாழ்த்தினை பவதாரினி பகிர்ந்தார். ஏற்புரையினை 'மகிழம்பூவும் அறுகம் புல்லும்' நூலின் ஆசிரியர் தீபதிலகை வழங்கினார்.
சிறப்பு நிகழ்ச்சியாக இந்தியா தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான சோழ.நாகராஜன் வழங்கிய 'கலைவாணர் இசைப்பேருரை' நடந்தேறியது. இந்நிகழ்ச்சிக்கான பதிலுரையினை இலண்டனில் இருந்து வருகைதந்த பாடலாசிரியர் இத்தாலி தனு வழங்கினார். நன்றியுரையினை இலண்டன் ஸ்ரீசுவாந்தினி வழங்கினார்.
நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு மதிய போசனமும் வழங்கப்பட்டது. நூலாசிரியர் ஏற்பாட்டில் வன்னியில் கலைச்செயற்பாட்டினை முன்னெடுக்கும் அமைப்பு ஒன்றிற்கான நிதி உதவியும் அளிக்கப்பட்டது.

'மகிழம்பூவும் அறுகம் புல்லும்' நாவல் வெளியீட்டு விழா.
Reviewed by Author
on
August 14, 2018
Rating:

No comments:
Post a Comment