விஜயகலா மகேஸ்வரன் கைது! பிணையில் விடுதலை -
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று காலை வாக்குமூலம் ஒன்றை வழங்கச் சென்ற போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் “மீண்டும் விடுதலைப் புலிகளின் கைகள் ஓங்க வேண்டும்” என அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மத்தியில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தார். இவருடைய இக்கருத்து தென்னிலங்கையில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதுடன், இவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த சர்ச்சைகளை அடுத்து விஜயகலா மகேஸ்வரன் தனது மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்திருந்தார்.
இதையடுத்து விஜயகலா மகேஸ்வரன் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு 25க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தன.
இவ்வாறான நிலையில் விஜயகலா மகேஸ்வரன், குற்றவியல் சட்டத்தின் 120ம் சரத்துக்கு அமைய குற்றமிழைத்துள்ளார் எனவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுதந்தரவுக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார்.
அத்துடன், அரசியலமைப்பின் 157வது அத்தியாயத்தை மீறியுள்ளதாகவும், அது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விஜயகலா மகேஸ்வரன் கைது! பிணையில் விடுதலை -
Reviewed by Author
on
October 08, 2018
Rating:

No comments:
Post a Comment