விடுதலை புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை? இலங்கை அரசு பேரதிர்ச்சி -
விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையை தொடர்ந்து இலங்கை அரசு அதிர்ச்சியடைந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மாவீரர் நாளினை முன்னிட்டு கடந்த 27ஆம் திகதி விடுதலைப் புலிகளின் அமைப்பின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகியிருந்தது.
இந்த அறிக்கை தற்போது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது கடந்த 2009ம் ஆண்டு விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என அறிவித்த இலங்கை அரசு, அதற்கான புகைப்படங்களை வெளியிட்டு உலக தமிழர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து தங்களது நாட்டில் விடுதலை புலிகள் இயக்கம் இல்லை எனவும், இறுதிக்கட்ட போரில் சரணடைந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் அப்போதைய ராஜபக்ச அரசு தெரிவித்தது.
இதனை முற்றிலும் மறுத்த தமிழ் ஆர்வலர்களான பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் எனவும் தக்க நேரத்தில் வெளிவருவார் எனவும் அறிவித்தனர்.
அதே சமயத்தில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும், விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் உயிர்ப்புடன் இருப்பதாக, திரும்பத் திரும்ப தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த சூழலில், தற்போது, மாவீரர் தினம் தொடர்பாக, விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படும் ஒரு அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழீழத்தை மீட்டெடுக்க மாவீரர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து போராடுவோம் எனவும் விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் வெளியீடாக வந்துள்ள இந்த அறிக்கை பல்வேறு சந்தேகங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் வித்திட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச பிரதமராவதில் சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பு உயிர்ப்புடன் இருப்பதாக கட்டமைக்கப்படுவதால், அரசு அதிகாரத்தில் ராஜபக்ச இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்தை உருவாக்க முயற்சிகள் நடப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், விடுதலைப்புலிகளை ஆயுதமாக, கையில் எடுத்து, அரசியல் கணக்கை ராஜபக்சே தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் பார்க்கும் போது, அறிக்கையில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம் இடம்பெற்றுள்ளது.
சிங்கள ஆட்சியாளர்களுக்கு முழு ஆதரவு அளித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் துரோகம் இழைத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ளதால், அவர்கள் மீதான இந்த துரோக குற்றச்சாட்டு, ராஜபக்சவின் தேவையை அழுத்தமாக பதிய வைக்கும் நுண் அரசியலாக அணுக வாய்ப்பு உள்ளது.
தாயகக் கனவுடன் போராடி மாண்ட விடுதலைப் புலிகள் சார்பில் வெளியாகியுள்ள இந்த அறிக்கை, தமிழர்களுக்கு ஆதாயம் தருமா? ஆபத்தை ஏற்படுத்துமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை? இலங்கை அரசு பேரதிர்ச்சி -
Reviewed by Author
on
November 30, 2018
Rating:

No comments:
Post a Comment