பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு -
இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் சம்பந்தப்பட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதை கோரியும் பிரித்தானிய பாராளுமன்றில் இனப்படுகொலை மாநாடு நடைபெறவுள்ளது.
உலக மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு நாளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.
‘தடுப்போம் தண்டிப்போம் என கொடுத்த வாக்குறுதி எங்கே’ எனும் தொனிப்பொருளில் பிரித்தானிய பாராளுமன்றின் 10ஆம் இலக்க குழு அறையில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே இணக்கமளித்த விடயங்களை முழுமையாக முன்னெடுத்திருக்கவில்லை.
அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை எவ்வாறு வலியுறுத்துவது என்பது குறித்தும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தண்டனை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்றும் நாளைய அமர்வில் கருத்துக்கள் முன்வைக்கப்படவுள்ளன.
இந்த மாநாட்டில் பிரித்தானியாவின் மூத்த அரசியல் வாதியும் பரிஸ்டருமான பீற்றர் ஹேன்ஸ், இலங்கை தொடர்பான கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் குழுவின் முக்கியஸ்தர் ரிச்சட் ரோஜர்ஸ், உலகளாவிய விடாமுயற்சி மற்றும் பங்குதாரர் அமைப்பின் அலெக்ஸ் பிரசந்தி மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் (நியூயோர்க்கிலிருந்து Skype தொழில் நுட்பத்தின் மூலம்) ஆகியோர் பிரதான உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
அத்தோடு காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் எம்.சி.எம். இக்பால், அரசியல் மற்றும் சர்வதேச கற்கைகள் பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளர் கலாநிதி சுதா நடராஜா, மனித உரிமைகள் சட்டத்தரணிகளான அருண் கணநாதன், சிவானி ஜெயராஜா மற்றும் ICPPG இன் இயக்குனர் அம்பிகை சீவரட்ணம் ஆகியோரும் இந்நிகழ்வில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர்.
இதேவேளை, இந்நிகழ்வில் இறுதியில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன் நிறுத்தி நீதியை பெற்றுக்கொள்வதற்கான வலியுறுத்தலை பிரித்தானியா முன்னெடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு வரும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான இணையவழி கையெழுத்து போராட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான மாநாடு -
Reviewed by Author
on
December 10, 2018
Rating:
Reviewed by Author
on
December 10, 2018
Rating:


No comments:
Post a Comment