இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தும் மைத்திரி! - றிசாட் பதியுதீன்
அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்துப் பேசி, அவர்களின் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கியமை சட்ட விரோதமான செயற்பாடாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
"அரசியலமைப்பை கையிலெடுத்துக் கொண்டு தவறுகள் செய்வதை தொடராமல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் விரும்புகின்ற, ஏற்றுக்கொள்கின்ற, அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்படுகின்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"அரசிலமைப்பில் இல்லாத அதிகாரத்தை தான் விரும்பியவாறு அக்டோபர் 26ஆம் திகதி தொடங்கி, இன்று வரை ஜனாதிபதி செயல்படுத்தி வருகின்றார்.
19வது திருத்தத்தில் 'பிரதமர் ஒருவரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை' என தெளிவாக கூறப்பட்டிருந்தும், அதனையும் மீறி கடந்த அக்டோபர் 26ஆம் திகதி பிரதமர் ரணிலை பதவி நீக்கினார். அதன் பின்னர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தார்.
நான்கரை வருட காலத்துக்குள் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என்ற 19வது அரசியலமைப்பு திருத்த விதி முறைகளையும் மீறி, அதனையும் கலைத்தார். தனக்கு இவ்வாறான அதிகாரம் இல்லையெனத் தெரிந்தும் இதனை செயல்படுத்தியுள்ளார்.
அவரால் நியமிக்கப்பட்ட புதிய பிரதமர், அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் சட்ட ரீதியாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களின் சட்டபூர்வமற்ற நடவடிக்கைகளுக்கும் ஜனாதிபதி துணைபோனார்.
சட்ட விரோத அரசாங்கத்தின் செயலாளர்களது சட்ட முரணான நடவடிக்கைகளுக்கும் ஜனாதிபதி அனுமதி அளித்ததுடன், தற்போது அவர்களை அழைத்து அமைச்சின் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு இன்று ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மேல் முறையீட்டு நீதிமன்றமானது நேற்றைய தினம் பிரதமர், அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் செயற்பாடுகளுக்கு இடைக்கால தடையுத்தரவை விதித்து அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி தனது தவறுகளை தொடர்ந்தும் செய்யாது நிலைமையை உணர்ந்து ஜனநாயகத்துக்கு வழி விட வேண்டுமெனவேண்டுகோள் விடுக்கின்றோம்" என்றும் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தும் மைத்திரி! - றிசாட் பதியுதீன்
Reviewed by Author
on
December 05, 2018
Rating:

No comments:
Post a Comment