மகிழ்ச்சியின் உச்சத்தில் வாழ்த்து தெரிவித்த நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன்! -
வட மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதரத்தின் உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் அனைவருக்கும் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
எமது வடகிழக்கின் கல்வி நிலை அண்மைய காலங்களில் சற்று தடுமாற்றத்திற்கு உள்ளாகியிருந்தது. மீண்டும் எமது மாணவ மாணவியர் எமது பாரம்பரிய கல்வித்திறனை நோக்கிப் பயணிப்பதைக் கண்டு நாம் யாவரும் மகிழ்வடைகின்றோம்.
வடக்கிலும், கிழக்கிலும் தத்தமது பிரிவுகளில் முதலிடம் பெற்ற அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள். முக்கியமாக சித்தி பெற்ற கிராமப்புற மாணவ மாணவியர்களை நாங்கள் விசேடமாக வாழ்த்துகின்றோம்.
காரணம் பல பொருளாதாரப் பிரச்சினைகள், குடும்பக் கஷ்டங்கள் மத்தியில் வைராக்கியத்துடன் அவர்கள் படித்து முன்னேறியுள்ளார்கள்.
நகர்ப்புற வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் அவர்கள் அடைந்த வெற்றிகள் எம்மைப் பெருமையடைய வைக்கின்றது.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பின்தங்கிய 15ஆம் கிராமத்தில் இருந்து மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவரை இதற்கு உதாரணங் காட்டலாம்.
ஒரு விவசாயின் மகன் இன்று அக் கிராமத்தில் இருந்து முதன் முதலாக வைத்தியத் துறையினுள் நுழைகின்றார் என்பது ஒரு சாதாரண விடயமல்ல. அவரை நாம் வாழ்த்துகின்றோம்.
யாவரும் உயர் கல்வியில் உன்னத நிலை அடைந்து எமது தமிழ் மண்ணிற்குப் பேரும் பெருமையும் பெற்றுத் தர வாழ்த்துகின்றோம். அவர்கள் ஒவ்வொருவரும் வருங்காலத்தில் எம் தமிழ் மண்ணின் விருத்திக்கு வித்திட வாழ்த்துகின்றோம் என்றும் வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சியின் உச்சத்தில் வாழ்த்து தெரிவித்த நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன்! -
Reviewed by Author
on
January 01, 2019
Rating:

No comments:
Post a Comment