செஞ்சோலையில் தொடரும் அவலம்! கைக்குழந்தைகளுடன் அந்தரிப்பு -
இதனால் கைக்குழந்தைகளுடன் அங்கிருந்த குடும்பங்கள் பெரும் அவலப்பட்டு இடம்பெயர்ந்து அருகிலுள்ள பாடசாலையில் தங்கியுள்ளார்கள்.
கிளிநொச்சி மலையாளபுரத்தில் உள்ள செஞ்சோலை வளாகம் அமைந்திருந்த காணியிலிருந்த பிள்ளைகளைத் துரத்திவிட்டு அக்காணிகளை அபகரிக்கும் நோக்கில் ஈவிரக்கமற்ற சிலர் செயற்பட்டு வருகின்றார்கள். இதன் காரணமாக செஞ்சோலையில் காலம் காலமாக வாழ்ந்த பிள்ளைகள் அக்காணிகளில் நிரந்தர வீட்டுத்திட்டத்தைப் பெறமுடியாது தற்காலிக தறப்பாள் கொண்டு அமைத்த கொட்டகைகளில் வசித்து வருகின்றனர்.
கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை வளாகம் அமைந்திருந்த காணியை தமிழீழ விடுதலைப் புலிகள் 80 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தினைச் செலுத்தி காணிக்குரியவர்களிடமிருந்து பெற்று அதில் செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தை அமைத்து யாருமற்ற பிள்ளைகளுக்கு சகல வசதிகளுடன் வழங்கியிருந்தனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்,செஞ்சோலை வளாகம் அமைந்துள்ள காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு அதில் படையினர் தங்கியிருந்தார்கள்.
இராணுவம் அக்காணியிலிருந்து முகாமை அகற்றி தற்போது வெளியேறியுள்ள நிலையில், செஞ்சோலைப் பிள்ளைகள் செஞ்சோலைக் காணியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் துணையுடன் தற்காலிக கொட்டகைகள் அமைத்துக் குடியேறினார்கள்.
அக்காணிகளில் செஞ்சோலைப் பிள்ளைகளுக்கான நிரந்தரவீடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் சி.சிறீதரன் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் அக்காணிகளை செஞ்சோலைப்பிள்ளைகளுக்கு வழங்கக் கூடாது, செஞ்சோலைப் பிள்ளைகள் பயங்கரவாதிகளால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் அவர்களை அவ்விடத்தை விட்டுத் துரத்தியடிக்க வேண்டும்.
அவர்கள் இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள் என்று கூறும் சில நயவஞ்சகர்கள் செஞ்சோலைக் காணிகளை அபகரிக்கும் நோக்குடன் அக்காணிகள் தமக்கே சொந்தமானவை எனக் கூறி செஞ்சோலைப்பிள்ளைகளை அக்காணிகளிலிருந்து துரத்தும் நோக்குடன் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்.
அக்காணிகளைத் தமக்குப் பெற்றுத் தருமாறு கரைச்சிப் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரி அங்கு குடியேறியுள்ள செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு வழங்கப்படவிருந்த வீட்டுத்திட்டத்தையும் கிடைக்க விடாது செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 6.40 மணியளவில் அப்பகுதியில் பெய்த மழையால் நிரந்தர வீடுகளின்றி தறப்பாள் கொண்டு அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகைகளில் தங்கியிருந்த செஞ்சோலைப் பிள்ளைகளின் இருப்பிடங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தமையால் அங்கு வசிக்க முடியாது கைக்குழந்கைகளுடன் பெரும் அவலப்பட்டு அருகிலிருந்த அன்னை சாரதா வித்தியாலயம் எனும் பாடசாலையில் தங்கியுள்ளார்கள்.
அப்பாடசாலையில் 20 இற்கும் மேற்பட்ட செஞ்சோலைப்பிள்ளைகளின் குடும்பங்கள் எவ்வித வசதியுமற்ற நிலையில் தங்கியுள்ளன.
மழை காரணமாக தமது தற்காலிக கொட்டகைகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளமையால் கைக்குழந்கைதகளுடன் அந்தரித்து நின்ற செஞ்சோலைப் பிள்ளைகள் தமது அவல நிலையைக் கூறி தமக்கு யாருமே இல்லை எனக்கூறி அழுது கண்ணீர் விட்டமையானது அவ்விடத்தில் நின்றவர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செஞ்சோலைப் பிள்ளைகளின் வாழ்விடங்களை அபகரிக்கக் கூட்டகப் பலர் செயற்பட்டுள்ள போதிலும் அப்பிள்ளைகளின் நிலை அறிந்ததும் சிலர் அம்முயற்சியிலிருந்து விலகியுள்ளார்கள்.
ஆனாலும் சிலர் காணிகளை 80 இலட்சத்திற்கு மேற்பட்ட பணத்திற்கு விற்பனை செய்து பணத்தினைப் பெற்று விட்டு மீண்டும் அக்காணிகளைப் பெற்றுவிட வேண்டும் என்ற பேராசையுடன் செயற்படுபவர்களுடன் இணைந்து அக்காணியில் பங்கு பெறுவதற்காக செஞ்சோலைப் பிள்ளைகளைக் காணியை விட்டு வெளியேற்றுவதற்காக ஈவிரக்கமற்ற முறையில் செயற்பட்டு வருகின்றார்கள்.
செஞ்சோலையில் தொடரும் அவலம்! கைக்குழந்தைகளுடன் அந்தரிப்பு -
Reviewed by Author
on
April 18, 2019
Rating:
Reviewed by Author
on
April 18, 2019
Rating:


No comments:
Post a Comment