அபிவிருத்தியையும் தீர்வையும் காண தவறவிட்ட தமிழ் தலைமைகள்: சிவசக்தி ஆனந்தன் -
எமது பிரதேசத்தின் அபிவிருத்தியையும் தீர்வையும் காண்பதில் தமிழ் தலைமைகள் தவறவிட்டுள்ளனர் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இன்று வவுனியா ஓமந்தை கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம், தோட்டம், கால்நடையையே பிரதான தொழிலாக கொண்டுள்ளார்கள்.
எனினும் இப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சரியான சந்தை வாய்ப்பு இல்லை. அதேபோல் குறிப்பிட்ட விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலைமை இருக்கின்றது.
வியர்வை சிந்தி கஸ்டப்பட்டு உழைப்பவர்கள் அதனை விற்பனை செய்யும் போது இடைத்தரகர்கள் அதற்குரிய விலையை வழங்குவதில்லை. இது காலகாலமாக நடந்து வருகின்றது.
உண்மையில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருளுக்கு குறிப்பிட்ட நிர்ணய விலை இருக்க வேண்டும்.
குறிப்பாக நெல்லை எடுத்துக்கொண்டால் அரசாங்கம் ஒரு நிர்ணயிக்கப்பட்ட விலையை தீர்மானித்தாலும் கூட இலங்கையில் பெரும் அரிசி ஆலை வைத்திருப்பவர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை மாற்றியமைக்கும் சக்தியாக இருக்கின்றனர். இருந்தாலும் தற்போது இடைத்தரகர்கள் அவ்விலையை மாற்றியமைக்கிறார்கள்.
இதனால் கஸ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைப்பவர்களிற்கு உரிய விலையில் விற்பனை செய்வதற்கு பல்வேறுபட்ட பிரச்சனைகள் உள்ளது. இதற்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நீண்டகால பிரச்சனையாக இருக்கின்றது.
அதற்காகதான் எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமான ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானித்து நிறைவேற்றி அதற்காக ஓமந்தையில் இருபது ஏக்கர் காணியும் ஒதுக்கப்பட்டது.
இங்கு கொண்டு வருவதற்கு நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் இன்று அது குறிப்பிட்ட சில நபர்களும் சில அரசியல் கட்சிகளும் தங்களுடைய கட்சி நலனிற்காக இன்று வவுனியாவின் எல்லையான மதவுவைத்தகுளத்தில் சிறிய காணிக்குள் அதனை அமைத்திருக்கிறார்கள்.
அவ்விடத்தில் இத்திட்டம் எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்று தெரியாது. ஒரு கட்டட தொகுதிக்கு ஐம்பதாயிரம் வாடகையும் பெருந்தொகையான முற்பணமும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு இலங்கையில் எங்கிருப்பவர்களும் அக்கடையை பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டதானது வடக்கு மாகாணத்தை மையமாக வைத்தும், வவுனியாவை மத்திய நிலையமாக வைத்துமே உருவாக்கப்பட்டது.
உண்மையில் இந்த பொருளாதார மத்திய நிலையம் எமது கையைவிட்டு போய்விட்டது என்பதுதான் கவலை.
சிலவிடயங்கள் எங்களது சக்திக்கு அப்பாற்பட்டும் காணப்படுகின்றது. கடந்த நான்கு வருடங்களாக இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தோம்.
இந்த ஆட்சி மாற்றத்தின் ஊடாக எங்களுடைய பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் நீண்டகாலமாக எங்களிற்கு இருக்கின்ற பிரச்சனைகளிற்கு தீர்வுகாணலாம் என்று நினைத்து மாற்றத்தை கொண்டு வந்தோம்.
ஆனால் எங்களுடைய அரசியல் தலைவர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த சந்தர்ப்பத்தை மக்களிற்காக பயன்படுத்தவில்லை என்பதே கவலையான விடயம்.
வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கம் பாதுகாப்பிற்காக பெருந்தொகையான பணம் ஒதுக்கியுள்ளமை பிரச்சனையில்லை. ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எங்களுடைய பிரதேசத்திற்கு அரசாங்கத்தில் இருந்து பணத்தை பெற்றுக்கொடுப்பதற்கு எங்களுடைய தமிழ் தலைமைகள் பெரிய தவறிழைத்திருக்கிறார்கள்.
ஒரு நிலையான அபிவிருத்தி இந்த நான்கு வருட காலப்பகுதியில் எதுவுமே செய்யவில்லை ஆனால் ஒரு சில சிறிய விடயங்கள் செய்யப்பட்டிருக்கின்றது.
ஒரு நிலையான திட்டமிடலில்லை ஆகவே இது தமிழ் அரசியல் தலைமைகள் விட்ட பெரிய தவறு என்பதுதான் எனது கருத்து. அவர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் பிளவுகள் இருக்கின்றது.
எங்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைமைகள் இந்த நான்கு வருடத்தில் பெயர் சொல்லக்கூடிய வகையில் எதுவுமே செய்யவில்லை. அதேபோன்று ஒட்டுமொத்தமான பிரச்சனைக்கு ஒரு தீர்வை காண்பதை கூட தவறவிடப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.
அபிவிருத்தியையும் தீர்வையும் காண தவறவிட்ட தமிழ் தலைமைகள்: சிவசக்தி ஆனந்தன் -
Reviewed by Author
on
April 18, 2019
Rating:
Reviewed by Author
on
April 18, 2019
Rating:


No comments:
Post a Comment