365 ஓட்டங்கள்..! வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் -
வங்கதேசம், அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர், அயர்லாந்தின் டப்லின் நகரில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகள் மோதின.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியில் களமிறங்கிய ஜான் கேம்ப்பெல்-ஷாய் ஹோப் இருவரும் அயர்லாந்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
இந்த ஜோடியை பிரிக்க அயர்லாந்து வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதற்கிடையில், ஷாய் ஹோப் தனது 5வது சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் கேம்ப்பெல் தனது முதல் சதத்தை விளாசினார்.


இவர்களது பார்ட்னர்ஷிப் 300 ஓட்டங்களை கடந்தது. அணியின் ஸ்கோர் 365 ஆக உயர்ந்தபோது கேம்ப்பெல் ஆட்டமிழந்தார். அவர் 137 பந்துகளில் 6 சிக்சர்கள், 15 பவுண்டரிகளுடன் 179 ஓட்டங்கள் விளாசினார்.
ஹோப்-கேம்ப்பெல் தொடக்க ஜோடி 365 ஓட்டங்கள் குவித்து, அதிக ஓட்டங்கள் விளாசிய தொடக்க ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்பு பாகிஸ்தானின் பகர் ஜமான்-இமாம் உல் ஹக் ஜோடி 304 குவித்ததே சாதனையாக இருந்தது.

ஆட்டத்தின் 48வது ஓவரில் 152 பந்துகளில் 170 குவித்த நிலையில் ஷாய் ஹோப் ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்சர்கள், 22 பவுண்டரிகள் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 381 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி 34.4 ஓவரில் 185 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கெவின் ஓ பிரையன் 77 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஆஸ்லே நர்ஸ் 4 விக்கெட்டுகளும், கேப்ரியல் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


365 ஓட்டங்கள்..! வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் -
Reviewed by Author
on
May 07, 2019
Rating:
No comments:
Post a Comment