வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி முதல்முறையாக முத்தரப்பு தொடரை வென்று வங்கதேச அணி சாதனை!
அயர்லாந்து-வங்கதேசம்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் அயர்லாந்தில் நடந்தது. லீக் போட்டிகள் முடிந்த நிலையில், நேற்றைய தினம் வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நடந்தது.
டப்ளினில் நடந்த இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேசம், பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், தொடக்க வீரர்களான ஷாய் ஹோப் மற்றும் அம்ப்ரிஸ் இருவரும் அதிரடியில் மிரட்டினர்.
ஷாய் ஹோப் 64 பந்துகளில் 74 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சுனில் அம்ரிஸ் அரைசதம் கடந்தார். அணியின் ஸ்கோர், 24 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
அப்போது சுனில் அம்ரிஸ் 69 ஓட்டங்களுடனும், டேரன் பிராவோ 3 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி தள்ளி வைக்கப்பட்டு, பின்னர் 24 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, வங்கதேச அணிக்கு 24 ஓவர்களில் 210 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியில், தமிம் இக்பால் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சபீர் ரஹ்மான் ஓட்டங்கள் எடுக்காமல் அவுட் ஆனார். எனினும், மற்றொரு தொடக்க வீரர் சவுமியா சர்க்கர் 41 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்த நிலையில் எடுத்தார்.
பின்னர் ரஹீம்(36), மிதுன்(17) ஆகியோர் அவுட் ஆனதைத் தொடர்ந்து, மக்மதுல்லா மற்றும் ஹுசைன் இருவரும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இவர்களின் கூட்டணியின் மூலம் வங்கதேச அணி 22.5 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த ஹுசைன், 24 பந்துகளில் 5 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார். மக்மதுல்லா 19 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம், வங்கதேச அணி முதன்முறையாக முத்தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.



வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி முதல்முறையாக முத்தரப்பு தொடரை வென்று வங்கதேச அணி சாதனை!
Reviewed by Author
on
May 19, 2019
Rating:
No comments:
Post a Comment