வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்காகவே! – சீமான் முழக்கம்
வீழ்ந்த இனம் வீழ்ந்ததாகவே இருக்கட்டும் என வீழ்த்தியவர்கள் இறுமாந்து இருக்க, அதை முறியடித்து, வீழந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்காகவே என்பதை தமிழர்கள் தமக்குள்ளாகவே உறுதிசெய்யும் எழுச்சி நாளாக முள்ளிவாய்க்கால் நாள் அமைகின்றது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈழப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் 10ஆம் ஆண்டு நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெறுகிறது.
இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது,
“விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்ற பொய்யுரையை வைத்துக்கொண்டு, விடுதலைப்புலிகளின் அழிவிற்கு பின்னால் தமிழர்களுக்கு சம உரிமை வழங்குவோம் என்ற பசப்பு வார்த்தைகளோடு சிங்கள அரசு இந்த இன அழிப்பு போரினை நடத்தியது.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 வரை இடம்பெற்ற இந்தக் கொடுமையான இன அழிப்புப் போரில் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் கொலைசெய்யப்பட்டார்கள். எண்ணிலடங்காத பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
நடந்து முடிந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு கடந்த 10 ஆண்டுகளாக உலக அரங்குகளில், ஐ.நா மனித உரிமை அமர்வுகளில் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறோம்.
ஆனால் நியாயமான எமது குரலை உலக சமூகம் சிறிதளவுகூட பொருட்படுத்தாமல் சிங்கள பேரினவாத அரசிற்கு தனது முழுமையான ஆதரவினை வழங்கி வருவது தமிழ்த்தேசிய இனத்திற்கு உலக சமூகம் செய்துவருகின்ற மாபெரும் அநீதியும், பெருங்கொடுமையும் ஆகும்.
தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பினை ஐ.நா மன்றமும், உலகச் சமூகமும் முன்னெடுக்காமல் மௌனமாக இருப்பது இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த பேரினவாதிகள் மேற்கொண்ட இனப்படுகொலையை அங்கீகரிக்கின்ற நடவடிக்கையாகவே தமிழர்களாகிய நாங்கள் கருதுகிறோம்.
தாயக விடுதலைப்போரில் உயிர்நீத்த தாய்த் தமிழ் உறவுகளுக்கும், இன பற்றாளர்களுக்கும் எமது அக வணக்கம். தன்னுயிர் தந்து விடுதலை வேட்கைக்காக களத்தில் நின்ற எம் மாவீரர்களுக்கு எமது வீரவணக்கம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்காகவே! – சீமான் முழக்கம்
Reviewed by Author
on
May 18, 2019
Rating:

No comments:
Post a Comment