தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்! தாய்நாட்டிற்கான இராணுவத்தினர் அமைப்பு கோரிக்கை -
பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைதாகி சிறை வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவம், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பை வழங்குமாறு தாய்நாட்டிற்கான இராணுவத்தினர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கருணா அம்மான், குமரன் பத்மநாதன் உள்ளிட்டவர்கள் இன்று வெளியே சுதந்திரமாக இருக்கின்ற நிலையில், ஏன் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வெளியே அனுமதிக்க முடியாது என்று அந்த அமைப்பின் இணைப்பாளரான மேஜர் அஜித் பிரசன்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் தாய்நாட்டிற்கான இராணுவத்தினர் என்கிற அமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “சுனில் ரத்நாயக்க, புலனாய்வுத்துறையின் மேஜர் டிக்ஷன் மற்றும் கோப்ரல் பிரியந்த ராஜகருணா ஆகியோருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அநுராதபுரத்தில் ஜனாதிபதி தனது முதலாவது பிரசாரக் கூட்டத்தின்போது இவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதாக உறுதியளித்திருந்தார். இன்னும் அது நடக்கவில்லை.
ஆனால் சமூகவலைத்தளங்களில் குறித்த நபர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் பரவிவருகின்றன. இது சிறந்த விடயம். ஆனாலும் 30 வருடப் போர் செய்து எமது பக்கமும் அவர்களுடைய பக்கமும் ஆயிரக்கணக்கானவர்கள் கொலை உயிரிழந்தார்கள்.
வடக்கிலும் விதவைகள் உள்ளனர். தெற்கிலும் அதே நிலைமை உள்ளது. அவர்கள் துரோகி என நாங்களும், நாங்கள் துரோகி என அவர்களும் கூறுகின்றோம். எனினும் விதவைகளும், பிள்ளைகளுமே இறுதியில் துன்பப்படுகின்றனர்.
போர்ச் சட்டத்தின்படி உலகில் இருதரப்பினரும் கைதிகளைப் பரிமாறிக்கொண்டமை நடந்திருக்கிறது. ஈழப்போர், மனிதாபிமான நடவடிக்கை என்றுகூறி போர் செய்திருந்தாலும் இறுதியில் இருதரப்பினரும் உயிரிழந்தார்கள்.
காயமடைந்தார்கள். இருதரப்பினரிலும் மரண தண்டனைப் பெற்றவர்கள், தண்டனை பெற்றவர்கள் சிறைகளில் உள்ளனர். அவர்களில் சுனில் ரத்நாயக்க உள்ளிட்டவர்களும் இருக்கின்றார்கள்.
ஆகவே சுனில் ரத்நாயக்க, டிக்ஷன் ராஜமந்திரி மற்றும் பிரியந்த ராஜகருணா உள்ளிட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்தால், தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் விடுதலையை கொடுங்கள் என்று ஜனாதிபதியிடம் கோருகின்றேன்.
கருணா அம்மான், கே.பி உள்ளிட்டவர்கள் வெளியே சுதந்திரமாக பிரச்சினையின்றி இருப்பார்கள் என்றால் இவர்களுக்கும் மன்னிப்பு கொடுக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்! தாய்நாட்டிற்கான இராணுவத்தினர் அமைப்பு கோரிக்கை -
Reviewed by Author
on
November 23, 2019
Rating:

No comments:
Post a Comment