அண்மைய செய்திகள்

recent
-

சி.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும்! அஸ்கிரிய பீடம் கோரிக்கை -


வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உடனடியாக கைது செய்ய வேண்டும் என அஸ்கிரிய பீடம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கள் தேசத்துரோக கருத்துக்கள் எனவும் அஸ்கிரிய பீடத்தின் நாரங்கனாவே ஆனந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை ஒரு பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் பாலி மொழியில் எழுதப்பட்ட புனைகதைகள் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
சி.வி.விக்னேஸ்வரனின் இந்த கருத்து கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் நாரங்கனாவே ஆனந்த தேரர் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
“வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் ஆரம்பத்தில் இருந்தே சிங்கள பெளத்த எதிர்ப்பு கருத்துக்களை கூறிவரும் நபராவார்.
ஏனைய தமிழ் அரசியல் வாதிகளை விடவும் விக்னேஸ்வரன் கூறும் கருத்துக்கள் வெறுக்கத்தக்க கருத்துக்களாகவே அமைந்து வருகின்றது.
இந்நிலையில் அண்மையில் மஹாவம்ச வரலாற்றை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை அவர் முன்வைத்திருந்தார். இது தேசத்துரோக கருத்தாக நாம் கருதுகின்றோம்.
அத்துடன் சிங்கள பெளத்த மக்களை கோபப்படுத்தும் வகையில் அவரது அரசியல் நோக்கத்துக்காக செய்துகொண்ட கருத்தாக நாம் நினைக்கின்றோம்.
ஒரு நாட்டின் வரலாற்றை அடையாளப்படுத்துவது அந்நாட்டின் தொல்பொருள் வரலாறுகளை கொண்டேயாகும்.

இலங்கையின் வரலாறுகளும் பெளத்த சிங்கள தொன்மையும் எமது தொல்பொருளியல் சான்றுகள் மூலமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு இருக்கையில் அவற்றை விமர்சித்து அரசியல் செய்வது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
ஆகவே சிறுபான்மை மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை திருப்பும் விதத்திலும் சிறுபான்மை மக்கள் சிங்கள மக்களை எதிர்த்து செயற்படும் நோக்கத்திலும் எடுக்கும் முயற்சி சர்வதேச சதியா என்ற சந்தேகம் உள்ளது.
எனவே அரசாங்கம் விக்னேஸ்வரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அஸ்கிரிய பீடத்தின் நாரங்கனாவே ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும்! அஸ்கிரிய பீடம் கோரிக்கை - Reviewed by Author on December 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.