வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி -
வடக்கு, கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளதாக திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு ஆயர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
வடக்கு, கிழக்கு ஆயர்கள் கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்தோம். அந்த சந்திப்பு சுமூகமான சந்திப்பாக அமைந்தது. வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி மிகவும் கவனமாக பிரச்சினைகளை செவிமடுத்து பல விடயங்களுக்கு தீர்வினை வழங்குவதாக உறுதியளித்திருக்கின்றார்.
வடக்கு, கிழக்கில் மக்கள் எதிர்கொள்ளும் பல விடயங்களை ஆயர்கள் நாங்கள் பேசினோம். அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர், மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு போன்ற பல விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டன.
அந்த விடயங்கள் குறித்து நேரடியாக கவனத்தில் எடுத்து தீர்வுகளை வழங்குவதாக உறுதியளித்திருக்கின்றார்.
வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கத்துடன் நேரடியாக கலந்துரையாடல்களை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதியிடம் கேட்டதற்கும் அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு தனியாகவும், கிழக்கிற்கு தனியாகவும் ஜனாதிபதியை சந்திப்பதற்கும், அவருடன் வடக்கு, கிழக்கு நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்கும், அதனுடன் தொடர்புபட்ட அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதி உறுதியளித்திருக்கின்றார்.
எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் இதுபோன்ற விடயங்களை பேசுவதற்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி தந்துள்ளார். எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை பெற்று தருவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. திருப்தியான தீர்வு உடனடியாக கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்க முடியாது.
ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது முன்னெடுக்கப்படும்.
வடக்கு, கிழக்கு மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல முயற்சிகளை மேற்கொள்வார் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அதன் காரணமாகவே அந்த அமைச்சினை அவருக்கு வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை.
அவசரமான உடனடியாக தேவைப்படும் விடயங்கள் குறித்தே நாங்கள் பேசினோம். வடக்கு, கிழக்கில் நாங்கள் சிவில் அமைப்பு ஒன்றிணை உருவாக்கிய பின் மீண்டும் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி -
Reviewed by Author
on
December 17, 2019
Rating:

No comments:
Post a Comment