போர்க்காலத்தில் காணாமற்போனோர் உயிரிழந்திருக்கலாம் - ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு -
போர்க்காலத்தில் காணாமல் போனவர்கள் உயிரிழந்திருக்கலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காணாமல் போனவர்களை தேடியலையும் உறவினர்களுக்கு சான்றிதழை வழங்குவதை விட வேறு சிறந்த வழி இல்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன், ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“போர்க் காலத்தில் பலர் காணாமலாக்கப்பட்டார்கள் என்பது அரசியல் மயப்படுத்தப்பட்ட விடயமாகும்.
போரின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் இணைந்தவர்கள் மட்டுமல்ல, எமது இராணுவத்தைச் சேர்ந்த பல சிப்பாய்களும் பலியானார்கள்.
காணாமல் போனோர்கள், இறுதியில் அவர்களது சடலங்கள் கூட உறவினர்களுக்கு வழங்கமுடியாமலேயே போன சந்தர்ப்பங்களும் ஏற்பட்டது. போர்க் காலத்தில் அவ்வாறே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்த பலர் உயிரிழந்திருக்கலாம்.
அவர்களது உடல்கள் மீள அவர்களது உறவினர்கள், பெற்றோரால் கண்டுபிடிக்க முடியாமற் போனதால் உயிரிழந்துவிட்டார்கள் என்ற விடயத்தை அவர்களது மனங்களும் ஏற்கமறுக்கின்றன.
அதேபோன்று நான் இராணுவத்திலிருந்த காலத்தில் முகமாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். அப்போது 129 இராணுவச் சிப்பாய்கள் காணாமல் போனார்கள். தேடியும் கிடைக்கவில்லை.
இரண்டு வாரங்களுக்குப் பின் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் சில உடல்கள் எமக்கு அளிக்கப்பட்டபோது அவற்றில் விடுதலைப் புலிகளின் சடலங்களும் இருந்திருக்கலாம். ஏனென்றால் அடையாளங்காண முடியாத அளவுக்கு அந்த சடலங்கள் இருந்தன.
அத்துடன் நான் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது மாணவி ஒருவர் என்னிடம் வந்து தனது தந்தை மீது ஆர்ட்டிலரி விழுந்து அவரது உடற்பாகங்கள் கூட கண்டுபிடிக்கவில்லை என கூறினார்.
இருப்பினும் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்த மணலை எடுத்து மரபணுப் பரீட்சை செய்தே கண்டுபிடிக்கப்பட்டது.
இப்படியிருக்க காணாமல் போனோரை நான் இரகசிய முகாம்களில் அடைத்து வைத்திருப்பதாக என் மீதும் கடந்த காலங்களில் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
நான் யாரையும் அவ்வாறு அடைத்துவைக்கவில்லை. ஆகவே காணாமல் போனோர் விவகாரத்தில் அவர்களது பெற்றோருக்கு சான்றிதழ் அளிப்பதை விட வேற சிறந்த வழி இல்லை” என ஜனாதிபதி கூறியுள்ளார்.
போர்க்காலத்தில் காணாமற்போனோர் உயிரிழந்திருக்கலாம் - ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு -
Reviewed by Author
on
December 17, 2019
Rating:

No comments:
Post a Comment