இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்தை கடுமையாக விமர்சித்துள்ள சுரேஸ் பிரேமசந்திரன்!
சம்பந்தனின் செயற்பாடுகளே மாற்றுத் தலைமைக்கான அவசியத்தை வலியுறுத்துகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சம்பந்தன் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு விசுவாசமாக நடந்துகொண்டாரா? தமிழ் மக்களுக்கு உரித்தான உரிமைகள் எதனையாவது பெற்றுக்கொடுத்தாரா?
கடந்த நான்கரை வருடங்களாக அவர் எடுத்த முடிவுகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததற்கான காரணத்தைப் பரிசீலித்தாரா? அதிலிருந்து பாடங்கள் எதனையும் கற்றுக்கொண்டாரா?
இப்பொழுது மீண்டும் ஒருமுறை முழுமையான ஆணை வேண்டுமெனக் கேட்கிறார். ஒரு பகுதி கூட யாருக்கும் போய்விடக்கூடாது என்றும் கூறுகிறார்.
இத்தகைய புதிய ஆணையினூடாக எதனையாவது சாதிப்பதற்கான திட்டங்களோ, வழிகாட்டல்களோ, அதற்கான வியூகங்களோ உங்களிடம் இருக்கின்றதா?
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்ல விடயமாக இருக்கலாம்' என்ற ஒரு கருத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லதென்று சம்பந்தன் கருதுவாரானால் விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்டதன் பின்னரான கடந்த பத்து வருடத்தில் அவர் எதனைச் சாதித்தார்?.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லது என்று கூறுவதானது ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டது நல்லதொரு விடயமாக இருக்கலாம் என்றே பொருள்படும்.
ஆயுதப் போராட்டம் என்பது சிங்கள-பௌத்த மேலாதிக்க சக்திகளிடமிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான போராட்டமே தவிர, அது ஒரு பயங்கரவாத நடவடிக்கையல்ல.
வெளிநாட்டு நீதிமன்ற வழக்குகளில் கூட விடுதலைப் புலிகள் உரிமைகளுக்காகப் போராடுகின்ற அமைப்பே தவிர பயங்கரவாத அமைப்பல்ல என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆகவே இதில் எது சரி என்பதை சம்பந்தன் தெளிவுபடுத்த வேண்டும்.
விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, ஏனைய விடுதலை அமைப்புகளும்கூட, தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்காக தமது இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள்.
பல்வேறு தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். அவர்களின் தியாகங்களின் மீது நின்று தான் நாம் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து குரல்கொடுக்கின்றோம் என்பதை மறந்துவிடக்கூடாது.
நீங்கள் சொல்வது அத்தனையும் சரியென்று நினைக்காதீர்கள். உங்களது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனை உணர்ந்து நீங்கள் கருத்துக்களை வெளியிடுவது நல்லது. மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியும் எனக் கருத வேண்டாம்.
உங்களது உதடுகள் ஐக்கியத்தை உச்சரிக்கின்ற போதிலும் உங்களது தன்னிச்சையான செயற்பாடுகள் எப்பொழுதும் ஐக்கியத்திற்குக் குந்தகமாகவும் எதிராகவுமே இருக்கின்றது.
உங்களது செயற்பாடுகளும் அணுகுமுறைகளுமே ஒரு மாற்றுத் தலைமைக்கான அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்தை கடுமையாக விமர்சித்துள்ள சுரேஸ் பிரேமசந்திரன்!
Reviewed by Author
on
December 22, 2019
Rating:

No comments:
Post a Comment