இலங்கை தமிழ் அகதிகள் குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம்! தமிழ் தேசியக் கூட்டமைப்பு -
இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் விடயத்தில் அவர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் குடியுரிமை திருத்த மசோத கொண்டுவரப்பட்ட நிலையில், அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் பிரகாரம் மத ரீதியில் துன்புறுத்தப்பட்ட அகதிகள் தவிர்ந்து ஏனைய அனைவரும் இந்திய பிரஜைகள் அல்ல என்ற நிலைப்பாட்டினை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக இலங்கை தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டமை குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்த வெளியிட்டிருந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“அகதிகள் விடயத்தில் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்றோம். குறிப்பாக இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் விடயத்தில் அவர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம்.
இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தொடர்புபட்டுள்ள ஒன்றாகும். அதாவது அகதிகள் விடயத்தில் அவர்களின் அக்கறையும் உள்ளது. அத்துடன் இந்திய அரசாங்கமும் இது குறித்து சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதனை நாம் தொடர்ச்சியாக அவர்களிடம் முன்வைத்து வருகின்ற காரணியாகும். இன்றும் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் அகதிகளாக உள்ளனர். அவர்களை இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கடந்த ஆட்சியின் போதும் நாம் கூறினோம்.
இந்நிலையில், அவர்களின் முழுமையான விருப்பத்துடன் அவர்களை இங்கு வரவழைக்கும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அகதிகள் குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம்! தமிழ் தேசியக் கூட்டமைப்பு -
Reviewed by Author
on
December 14, 2019
Rating:

No comments:
Post a Comment