மன்னார் மாதோட்ட வாசகப்பா,நாடக மெட்டுக்கள் "பாகம் 01" ஒலிப்பதிவு இறுவட்டு,நூல் வெளியீட்டுவிழா-படங்கள்
மன்னார் மாதோட்ட வாசகப்பா, நாடக மெட்டுக்கள் (பாகம் 01)" ஒலிப்பதிவு இறுவட்டு, நூல் ஆகியன கடந்த 29.02.2920 அன்று நானாட்டானில் சிறப்பாக வெளியிடப்பட்டது.
மன்னார் மாதோட்டத்தில் கடந்த நான்கு நூற்றாண்டுகளைக் கடந்து மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்திருக்கும் தென்மோடி, வடமோடிப் பண்புகளைக் கொண்ட தேசியக் கலைவடிவமான வாசாப்பு, நாடகங்களின் இசைப்பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு அதன் முதலாவது பாகம் இறுவட்டாகவும் நூலாகவும் இம்மாதம் 29ஆம் திகதி மன்னார், நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் வடமாகாணப் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவெல் பெர்னாண்டோ ஆண்டகை, கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களும்
சிறப்பு விருந்தினராக
வடமாகாணப் பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களும்
இறுவட்டு, நூல் வெளியீடு என்பனவற்றுடன் விருந்தினர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து “வாசகப்பா, நாடக இசை நுட்பங்கள்” எனும் சிறப்பு நிகழ்வு யாழ்.பல்கலைக் கழக இசைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் தவநாதன் றொபேட் தலைமையில் நிகழ்த்தப்பட்டது.
குறித்த ஒலிப்பதிவில் பங்கு கொண்ட நாட்டுக்கூத்து அண்ணாவிமார்கள், நடிகர்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் “என்றிக் எம்பரதோர்” நாட்டுக் கூத்தில் இருந்து சிறிய காட்சியும் அவ்வரங்கில் ஆற்றுகைப்படுத்தப்பட உள்ளது. “வாசகப்பா, நாடக இசை நுட்பங்கள்” , “என்றிக் எம்பரதோர்” ஆகிய நிகழ்வுகளில் திரு.தவநாதன் றொபேட் அவர்கள் ஹார்மோனியக் கலைஞராகவும் சங்கீதபூசணம் ம.இராஜசிங்கம் மிருதங்கக் கலைஞராகவும் அணி செய்கின்றனர்.
அண்ணாவியார் செ.அந்தோனிப்பிள்ளை, அண்ணாவியார் செ.மாசிலாமணி, அண்ணாவியார் ச.செ.டயஸ், திரு.செ.பிரகாஸ், திரு.ச.குணசீலன், திரு.ச.ஆசைப்பிள்ளை, திரு.அ.யூட் கிருபாகரன், அருட்பணி ப.விமல் ராஜ், திருமதி ஒ.மலர்விழி, திருமதி யூ.றோ.கொலஸ்ரிக்கா, திருமதி அ.றொக்சிகுருஸ், செல்வி மேரி ஜெனனி டிறோஸ், செல்வி தே.கனிமொழி, செல்வி ஞா. யூட் மொறின், திருமதி டெ.அன்பரசி ஆகியோர் முதன்மைக் குரலிசையாளர்களாகவும் பிற்பாட்டுக் கலைஞர்களாகவும் இந்த ஆவணப்படுத்தலில் பணியாற்றியுள்ளனர்.
இப்பாடல் மெட்டுக்களின் இராகம், தாளம், நடை போன்றவற்றை இசைத்துறை விரிவுரையாளர் த.றொபேட் வகைப்படுத்தியுள்ளார். இவ்விபரங்களுடனேயே ஒலிப்பதிவும் ஒலிப்பேழையும் வெளியிடப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தின் அரும் பெரும் முதுசமாக விளங்குகின்ற வாசாப்பு, நாடகக் கலையை ஆவணப்படுத்தும் முயற்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் பாடுபட்டவர் அருட்தந்தை செ.அன்புராசா அடிகளார் ஆவார். இவர் மன்னார் மாவட்டத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்கூத்து முதலான பல விதமான கலைகளிலும் புகழ்பெற்று விளங்குகின்ற கலைத்தவசி குழந்தை செ.செபமாலை அண்ணாவியாரின் மகன் ஆவார். அருட்தந்தை செ.அன்புராசாவுடன் அருட்தந்தை தமிழ்நேசன் அடிகளார் உற்ற துணையாய் நின்று பணியாற்றியுள்ளார்.
இவ்வொலிப்பதிவு மன்னார் கலையருவி நிலையத்தில் தற்காலிகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட தவநாதம் ஒலிப்பதிவுக் கலையகத்தால் அதன் இயக்குநர் திரு.த.றொபேட்டினால் மேற்கொள்ளப்பட்டது.
சந்தொம்மையார் வாசாப்பில் இருந்து 62 விதமான மெட்டுக்களும் என்றிக் எம்பரதோர் நாடகத்தில் இருந்து 76 விதமான மெட்டுக்களும் இந்த ஒலிப்பதிவில் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு கூத்துக்களும் (சந்தொம்மையார், என்றிக் எம்பரதோர்) மன்னார் மாவட்டத்தில் புகழ் பெற்ற மிகவும் பழமையான தென்மோடி, வடமோடிக் கூத்துக்கள் ஆகும்.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்.பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகம் ஈழத்தில் வழக்கில் இருந்து வருகின்ற இசைநாடகங்களையும் காத்தவராயன் சிந்துநடைக் கூத்தையும் ஒலிப்பதிவு செய்து வெளியிட்டிருந்தது.
அமரர் செ.மெற்றாஸ் மயில் இப்பணியை நிறைவேற்றியிருந்தார். அதன் பின்னர் 2007 இல் யாழ்.திருமறைக் கலாமன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் யாழ்ப்பாணத் தென்மோடிக் கூத்தின் 254 விதமான மெட்டுக்கள் ஒலிப்பதிவாக வெளியிடப்பட்டன. அத்துடன் 2008ஆம் ஆண்டு எமது நாட்டில் நிகழ்த்தப்பட்டு வருகின்ற இசைநாடகப் பாடல்களின் ஒலிப்பதிவும் யாழ்.திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்பட்டது.
ஈழத்தின் கலைத்துறை வரலாற்றில் அருட்தந்தை செ.அன்புராசா அடிகளாரின் முயற்சியில் வெளிவருகின்ற “வாசகப்பா, நாடக மெட்டுக்கள்” நான்காவதாக வெளிவருகின்ற வரலாற்று ஆவணமாகக் கணிக்கப்படுகின்றது. மன்னார் மாதோட்டத்தின் மண்வாசனைக் கலையாக விளங்குகின்ற கூத்துக்களின் பல நூற்றுக்கணக்கான அழகான இசை மெட்டுக்களின் முதலாவது பாகமே இப்போது வெளிவருகின்றது. மிக விரைவில் எஞ்சியிருக்கும் அனைத்துப் பாடல்களையும் ஆவணப்படுத்தும் அடுத்த கட்ட முயற்சிகள் அருட்தந்தை செ.அன்புராசா அடிகளாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இறை வழிபாடாகக் கூத்துக்களை நிகழ்த்தும் வழக்கம் ஈழத்தில் அருகி வருகின்றது. எனினும் மன்னார் மாவட்டத்தில் இன்று வரை இரண்டு இரவுக் கூத்துக்கள் மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மறுநாள் விடியும் வரை அந்நிகழ்வை இரசிக்கின்றனர்.
மரபு வழியான மண்ணின் கலைகளைப் பேணி வருகின்ற புனித பூமியாக மன்னார், மட்டக்களப்பு, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களே காணப்படுகின்றன என்பது துறை சார்ந்த பற்றாளர்களின் கருத்தாகும்.
மன்னார் மாதோட்ட வாசகப்பா,நாடக மெட்டுக்கள் "பாகம் 01" ஒலிப்பதிவு இறுவட்டு,நூல் வெளியீட்டுவிழா-படங்கள்
Reviewed by Author
on
March 03, 2020
Rating:

No comments:
Post a Comment