நாடாளுமன்றத் தேர்தல் மே 4ம் திகதி......???
கொரோனா வைரஸ் பரவுகை காரணமாக ஏப்ரல் மாதம் 25ம் திகதி இடம்பெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு மே மாதம் 4ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகத் தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அறிவிப்பு, வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவடைந்த பின்னர் வெளிவரலாம் என்றும் இல்லாவிடின் மார்ச் மாதம் 31ம் திகதி வரையான நிலைமைகளை அவதானித்த பின்னர் வெளிவரலாம் என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றது.
வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னர் தேர்தல் தொடர்பான சகல அதிகாரங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வசமாகின்றன.
ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் நடத்தப்பட்டு மே 14ஆம் திகதி நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இடம்பெறும் என்று ஜனாதிபதி வர்த்தமானியில் வெளியிட்டிருந்தார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் அச்ச சூழல் நிலவுகின்றது. அத்துடன் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
அரசியல் கட்சிகளும் தேர்தலை ஒத்திவைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டிருந்தாலும், அரசு அறிவித்த பொதுவிடுமுறை காரணமாக தபால் திணைக்களம் இயங்கவில்லை.
இதனால் தபால்மூல வாக்களிப்பை உரிய காலத்தில் தேர்தல்கள் திணைக்களம் திட்டமிட்ட வகையில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஏப்ரல் 25ம் திகதி தேர்தலை நடத்துவதற்கும் உதவித் தேர்தல்கள் ஆணையாளர்கள் காலம் போதாது என்று ஆணைக்குழுவுக்குத் தெரிவித்திருந்தனர்.
தமிழ் சிங்கள புத்தாண்டு கால விடுமுறையால் இந்தப் பிரச்சினையை சுட்டிக்காட்டியிருந்தனர்.
கொரேனா வைரஸ் அச்சம் காரணமாக மேலும் பொது விடுமுறை விடுக்கப்பட்டதால் சகல பணிகளையும் உரிய காலத்தில் நிறைவேற்ற முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு தேர்தலைப் பிற்போடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மே 14ம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டும் வகையில் மே 4ம் திகதி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
மார்ச் 31ம் திகதி வரையிலான நிலைமையை அவதானித்தே தேர்தல் திகதி இறுதி செய்யப்பட்டும். தற்போதைய நிலையில் மே 4ம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
நாடாளுமன்றத் தேர்தல் மே 4ம் திகதி......???
Reviewed by Author
on
March 20, 2020
Rating:

No comments:
Post a Comment