பெரும்பான்மையினத்தவர்களை மாத்திரம் அரசாங்கம் திருப்திப்படுத்துகிறது: ஞா.ஸ்ரீநேசன் -
கடந்த நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை இன மக்களின் நலன்கள் தொடர்பில் சில இழுத்தடிப்புக்களை செய்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு பல நன்மையான விடயங்களையும் செய்திருந்தது.
ஆனால் இந்த அராசாங்கம் வெறுமனே பெரும்பான்மையினத்தவர்களை மாத்திரம் திருப்திப்படுத்தும் வகையிலேயே செயற்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பலையடித்தோனாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாக வருவதற்கு சிறுபான்மை இன மக்களின் வாக்குகளும் பங்களிப்பு செய்திருந்தன. ஆனால் தான் சிங்கள் பௌத்த மக்களால் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டேன் என கருத்து வெளியிட்டுள்ளார்.
உண்மையில் பெரும்பான்மை மக்களால் கிட்டத்தட்ட 47 வீதமான வாக்குகளே அவருக்கு அளிக்கப்பட்டிருந்தன. இது 50% எனும் எல்லையை கடக்க போதுமானதாக இல்லை.
இருந்தும் சிறுபான்மையினங்களான தமிழ் பேசும் சமுகத்தினர் வழங்கிய 5.25% மான வாக்குகளே அவர் ஜனாதிபதியாகுவதற்கான அங்கிகாரத்தை கொடுத்துள்ளது.
இதை மறுத்து வெறுமனே பெரும்பான்மையின மக்களால்தான் ஜனாதிபதியாகியதாக கூறி அவர்களை மாத்திரம் திருப்திப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார்கள்.
கடந்த நல்லாட்சி அர சாங்கம் சிறுபான்மை இன மக்களின் நலன்கள் தொடர்பில் சில இழுத்தடிப்புக்களை செய்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு பல நன்மையான விடயங்களையும் செய்திருந்தது.
அதில் தமிழ் பேசும் சமுகங்களின் நலன்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையிலான முன்னெடுப்புகள் பலவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனும் கோரிக்கைக்கு ஏற்ப 237 அரசியல் கைதிகளில் 130 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
சிலர் நன்னடத்தையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 87 அரசியல் கைதிகளே சிறையில் எஞ்சியுள்ளார்கள். இவர்களையும் விடுவிக்கும் பணிகளும் வழக்குகளின் தன்மைக்கேற்ப முயற்சி செய்யப்பட்டு வருகின்றன.
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்த 1 இலட்சம் ஏக்கர்களுக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. சோதனைச் சாவடிகள் பல அகற்றப்பட்டு பொது மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதற்கான அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய அரசியல் யாப்பினை வரைந்தெடுப்பதற்காக வழிநடாத்தல் குழு ஒன்று உருவாக்கப்பட்டு 83 கூட்டங்கள் வரை நடாத்தப்பட்டதோடு அரசியல் யாப்புசபையும் உருவாக்கப்பட்டது.
இதன் பிரகாரம் இடைக்கால அறிக்கையும் தயாரிக்கப்பட்டு அதனை 3/2 பெரும்பான்மையுடன் நிறைவேற்ற இருந்த நிலையிலேயே அக்டோபர் சதிப்புரட்சி முலமாக பாராளுமன்றம் கலைக்கப்ப்பட்டது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசானது நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கும், பொறுப்புகூறலுக்கும், மனித உரிமையினை பாதுகாப்பதற்குமாக நடவடிக்கை எடுத்தல் மற்றும் ஒர் அரசியல் தீர்வினை காணுதல், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்பினைக் கூறல் போன்ற விடயங்களை செய்வதற்காக இலங்கை அரசானது உடன்பட்டு 30.1 , 34.1 , 40.1 , 44.1 என்னும் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு அவற்றுக்குரிய கால அவகாசத்தில் நிறைவுறுத்துவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தற்போது அத்தீர்மானங்களிலிருந்தும் இப்போதைய அரசாங்கம் விலகி தமிழ் மக்களை வெளிப்படையாகவே ஏமாற்றியுள்ளது. இத்தகைய அரசாங்கம் மேலும் தொடர வேண்டுமா? இல்லையா? என்பதை சிந்தித்து தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்புகளில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கயஸ்தர்கள் மற்றும் வாலிபர் முன்னனியின் உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.
பெரும்பான்மையினத்தவர்களை மாத்திரம் அரசாங்கம் திருப்திப்படுத்துகிறது: ஞா.ஸ்ரீநேசன் -
Reviewed by Author
on
March 07, 2020
Rating:

No comments:
Post a Comment