அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருக்கு அவசர கோரிக்கையொன்றினை விடுத்துள்ள வடமாகாண முன்னாள் அமைச்சர் -


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியல் ரீதியாக சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அப்போதிருந்த தமிழ் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியிருந்தார். இதனை நீங்களும் நன்கறிவீர்கள் எமது மக்களும் நன்கறிவார்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பல்வேறு இழுபறி நிலைகள், பிரச்சினைகள், உள்ளக முரண்பாடுகள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து சில பங்காளி கட்சிகள் பிரிந்து சென்ற போதிலும் மேற்படி தலைவரினுடைய வழிகாட்டலினால் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதென்ற ஓர் நோக்கத்திற்காகவே எமது கூட்டமைப்பை சிதைவடைய செய்யாமலும், அழிந்து போகாமலும் எமது மக்கள் ஆதரித்து பாதுகாத்து வருகின்றனர்.
அதேபோன்று கூட்டமைப்பு உடையக்கூடாது என்பதில் நானும் திடமான உறுதியோடு பயணித்து வருகின்றேன்.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் எமது புணர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள், மாவீரர் குடும்பங்கள் மற்றும் யுத்தத்தினால் மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டவர்கள் மட்டில் ஓர் விசேட கருத்திட்டம் உருவாக்கப்படாமலும் முன்னுரிமை அடிப்படையில் ஓர் வாழ்வாதார திட்டம் உரிய முறையில் தற்பொழுது வரை உருவாக்கப்படாமலும் இருந்து வருவது ஓர் பாரிய குறைபாடாகவே காணப்படுகின்றது.

பொதுமக்களுக்கு அப்பால் இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விசேட கருத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு இவர்களுடைய வாழ்வாதாரம் பிள்ளைகளின் கல்வி என்பன கவனிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இவை எதுவும் உரிய முறையில் நடைபெறவில்லை இருந்தும் என்னால் முடிந்த இவர்களுக்கான சில கருத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது இடைநடுவில் நிறுத்தப்பட்டதை நீங்கள் யாவரும் அறிவீர்கள் என நம்புகின்றேன்.
மேலும் தேர்தல் காலத்தின் போது அவ்வப்போது இவர்களுடைய தியாகங்களும், வீர செயற்பாடுகளுமே பலருக்கு மேடையில் பேசுபொருளாக இருக்கின்றது. தேர்தலின் பின்னர் இவர்கள் யாரோ நாம் யாரோ என்ற நிலைதான் காணப்படுகின்றது.
இவை எதிர்காலத்தில் மாற்றப்பட வேண்டும். எத்தனையோ வினைத்திறன் மிக்க புணர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளும்இ தளபதிகளும் குறிப்பாக வினைத்திறன் மிக்க பெண் போராளிகளும், எம்மத்தியில் தற்பொழுதும் வாழ்ந்து வருகின்றார்கள் இவர்கள் அரசியல் நீரோட்டத்தில் எமது தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அவர்களுக்கான உரிய அந்தஸ்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி சபை என்பவற்றிற்கு உரிய ஆசன ஒதுக்கீட்டின் ஊடாக அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
யுத்தம் முடிவடைந்தவுடன் இவர்களை அரசியல் நீரோட்டத்திற்குள் கொண்டு வருவது மற்றும் வெளிக்கொணர்வது பொருத்தமானதாக இருக்கவில்லை. அதற்கான சூழ்நிலையும் இருக்கவில்லை.

எம்மொழி மதிக்கப்பட வேண்டும், எமது கலை கலாசாரம் அழிந்து போகாமல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தங்கள் உயிர்களையும் துச்சமென மதித்து கல்வியை தொலைத்து குடும்பத்தை விடுத்து தமது எதிர்காலத்தை மறந்து ஒரு உன்னத நோக்கத்திற்காக சென்றவர்களே இவர்கள்.
எம்மினத்திற்காக தங்களது உயிர்களையே துச்சமென மதித்த இவர்களிடம் ஒரு பொறுப்பை உரிய முறையில் ஒப்படைப்போமெனில் அதனை இவர்கள் எந்தவித அப்பழுக்குகளுமின்றி உயரிய சிந்தனையோடு செய்து முடிப்பார்கள் அதற்கான ஆற்றலும் வல்லமையும் அவர்களிடம் நிறையவே புதைந்து கிடக்கின்றன அதற்கான சரியான தளத்தை உருவாக்கி கொடுக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் தார்மீக கடமையாகும்.

எனவே பல தடவைகள் நாடாளுமன்றம் சென்ற எமது முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர்களை எமது கட்சியின் பலமாகவும் சொத்தாகவும் எமது கட்சியை உரிய முறையில் கொண்டு செல்வதற்கான பொறுப்பினை அவர்களுக்கு வழங்குவதோடு வடக்கு கிழக்கில் இருக்கின்ற எட்டு மாவட்டத்திலும் உரிய சிறந்த போராளிகளை தெரிவு செய்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தங்கள் அனைவரையும் தாழ்மையாக வேண்டி நிற்கின்றேன்.
நீங்கள் அவ்வாறு செய்யும் பட்சத்தில் நான் இரவு பகலாக வேலை செய்து இவர்களை வெற்றி பெற வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன். வெற்றி பெற வைப்பேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
எனவே காலம் தாழ்த்தாது விரைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மிகவும் பணிவன்போடு கேட்டு நிற்கின்றேன்.எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருக்கு அவசர கோரிக்கையொன்றினை விடுத்துள்ள வடமாகாண முன்னாள் அமைச்சர் - Reviewed by Author on March 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.