சீனாவுக்கு பிரிட்டன் எச்சரிக்கை!
ஹாங்காங்கின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவை சீனா நிறைவேற்றினால், பிரிட்டன் சிறப்பு பாஸ்போர்ட் வைத்துள்ள ஹாங்காங் மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யவோம் என இங்கிலாந்து எச்சரித்துள்ளது.
பிரிட்டிஷ் காலணி ஆதிக்க கீழ் இருந்துவந்த ஹாங்காங் 1997 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் படி சீனாவுடன் இணைந்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் படி சீனா, ஹாங்காங்கிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என பிரிட்டன் கேட்டுக்கொண்டது. இதனால் தன்னுடன் இணைந்த ஹாங்காங்கிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ள சீனா பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இதனிடையே சீனாவிடன் இருந்து சுதந்திரம் கோரி ஹாங்காங்கில் கடந்த ஆண்டு முதல் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த போராட்டங்களின் போது ஹாங்காங்கில் உள்ள சீனா கொடிகள் மற்றும் அலுவலங்கள் அனைத்தும் சூரையாடப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த சீன அரசு ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை குறைக்கும் வகையிலான தேசிய பாதுகாப்புச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த மசோதா சட்டமாக்கப்படவுள்ளது. இது சட்டமாக்கப்பட்டால் ஹாங்காங்கின் சிறப்பு அதிகாரங்கள் ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது.
பிரிட்டன் கண்டனம்:
இந்த தேசிய பாதுகாப்புச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் தொடர் போராட்டங்கள் வலுத்துள்ளன. சீனாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சீனாவின் இந்த செயலுக்கு பதிலடி தரும் வகையில், பிரிட்டிஷ் சிறப்பு பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஹாங்காங் நாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
சிறப்பு பாஸ்போர்ட்:
ஹாங்காங் மக்களுக்கான சிறப்பு பிரிட்டிஷ் பாஸ்போர்ட் என்பது, ஹாங்காங் சீனாவுடன் இணைவதற்கு முன்பான காலகட்டங்களில் பிரிட்டன் ஹாங்காங் மக்களுக்கு வழங்கிய பாஸ்போர்ட். அதாவது 1997 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஹாங்காங் மக்களுக்கு இங்கிலாந்து வழங்கியிருந்து. இந்த பாஸ்போர்டை தற்போது 3,00,000க்கும் அதிகமான ஹாங்காங்கில் வசிப்போர் வைத்துள்ளனர். இந்த பாஸ்போர்ட் மூலம் பிரிட்டன் பயணம் செய்பவர்களுக்கு ஆறு மாதம் வரை அங்கு தங்க விசா தேவையில்லை.
இதனிடையே சீனாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப், சீனா இந்த சர்ச்சைக்குறிய தேசிய பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தினால், பிரட்டிஷ் சிறப்பு பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஹாங்காங் மக்கள் 6 மாதத்திற்கு பதிலாக 12 மாதங்கள் வரை விசா இல்லாமல் இங்கிலாந்தில் தங்க அனுமதிப்போம் என தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெற அனுமதிப்பதோடு வரும்காலங்களில் அவர்களுக்கு குடியுரிமை வழங்கவும் வழிவகை செய்வோம் என தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு பிரிட்டன் எச்சரிக்கை!
Reviewed by Author
on
May 29, 2020
Rating:

No comments:
Post a Comment