சிறைச்சாலைகளில் கையடக்க தொலைபேசி பயன்படுத்த முற்றாக தடை......
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (01) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
சிறைச்சாலைகளின் உள்ளக நிலை தொடர்பில் ஆராய்வதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாட்டில் இடம்பெறுகின்ற அநேகமான குற்றச்செயல்கள் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் சிறைச்சாலைகளில் இருந்து வழிநடத்தப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக இதன்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படுகின்ற தவறான அபிப்பிராயம் கவலைக்குரியது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தவறான அபிப்பிராயத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, சிறைச்சாலைகளுக்குள் கையடக்க தொலைபேசி பயன்பாட்டினை முற்றாக ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
சிறைச்சாலை அல்லது பொலிஸ் திணைக்களத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தால் அது நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாக்கத்தை செலுத்தும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எந்த அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும் அதிகாரி ஒருவர் சரியான விடயங்களை செய்யும்போது அதனை அங்கீகரிப்பதாகவும் ஊழலில் ஈடுபடும் மற்றும் செயற்றிறனற்ற அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்கள் தொடர்பில் உரிய தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தில் நிலவும் குறைபாடுகளை நீக்கி முழுமையாக ஒழுங்குபடுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி மற்றும் ஊக்குவிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு குழுவொன்றை நியமிக்கவும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment