விவசாயிகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம் உருவாகும் வகையில் நடவடிக்கை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு...
மரக்கறிகள், பழவகைகள் மற்றும் ஏனைய பயிர்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பது விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பொதுஜன முன்னணியில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (21) நுவரெலியா மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு, வலப்பனை நகரில் சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இதனைத் தெரிவித்தார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க மற்றும் நிமல் பியதிஸ்ஸ ஆகியோரினால் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரச வங்கிக் கடன்கள் தங்களுக்கு நிவாரணத்தை பெற்றுத்தரும் வகையில் இல்லையென விவசாயிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். நுவரெலியா மாவட்டத்தின் அரச நிறுவனங்களில் பல்வேறு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கு நியமனங்களை பெற்று வருவோர் குறுகிய காலத்தில் இடமாற்றம் பெற்று வேறு மாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர். அதன் காரணமாக பிரதேச மக்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
பொரமடுல்ல மத்திய மகா வித்தியாலயத்தின் விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்து, அதனை பாடசாலையுடன் இணைத்து பாலம் ஒன்றிணை நிர்மாணித்து தருமாறு மாணவர்கள் முன்வைத்த கோரிக்கையினை ஜனாதிபதி இராணுவ தளபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார். நாளைய தினமே அது பற்றி ஆராய்ந்து விரைவாக அக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். பிரதேச மக்கள் முன்வைத்த பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ரிக்கில்லகஸ்கட பிரதேச சபை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதிக்கு மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்தனர்.
வலப்பனை வைத்தியசாலைக்கு பிக்குகளுக்கான வாட்டுத் தொகுதியொன்றை நிர்மாணித்து தருமாறு மகாசங்கத்தினர் முன்வைத்த கோரிக்கை குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
தரம் வாய்ந்த விதை கிழங்குகள் பற்றாக்குறைக்கு தீர்வை பெற்றுத் தருமாறு விவசாயிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதியிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். சுயதொழிலாக பெண்கள் சிலர் சேர்ந்து முன்னெடுத்து வரும் “பஜட் பெக்” மரக்கறி மற்றும் பழவகைகள் திட்டம் ஜனாதிபதியினால் பாராட்டப்பட்டது. வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா கைத்தொழில் மற்றும் காணி உறுதிகள் இல்லாமையினால் எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க மற்றும் எஸ்பி.திசாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது...
விவசாயிகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம் உருவாகும் வகையில் நடவடிக்கை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு...
Reviewed by Author
on
July 22, 2020
Rating:

No comments:
Post a Comment