கோட்டாபாய ஜனாதிபதியின் அரசாங்கம் இன்னும் 20 வருடங்கள் நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்..........
வவுனியா, விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று சுயேட்சைக் குழு 7 இல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கத்திற்கு எதுவித நிபந்தனையுமின்றி முண்டு கொடுத்து காப்பாற்றியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். நிபந்தனையுடன் ஆதரவு வழங்கியிருந்தால் எமது மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தியிருக்க முடியும். ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை வந்த போது காப்பாற்றியதுடன் முஸ்லிம் தலைவர்களும் அமைச்சு பதவியையும் பெற்றுக் கொடுத்தார்கள். இதற்கு 2 கோடி ரூபாயை லஞ்சமாகவும் பெற்றார்கள். அண்மையில் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி தலைவி 21 கோடி ரூபாய் மக்களுக்கு உதவி செய்ய வந்த பணம் தொடர்பில் தெரிவித்திருந்தார். அதில் ஒரு போராளிக்கு கூட உதவி செய்யவில்லை. அந்தப் பணத்தைக் கூட கொள்ளையடித்துள்ளார்கள். இதுபோல தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறார்கள்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரின் அரசாங்கம் குறைந்தபட்சம் 20 வருடங்கள் ஆட்சியில் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி சின்னாபின்னாமாக சிதறியுள்ளது. சஜித் பிரிந்து சென்று தனித்து செயற்படுகிறார். இதனால் பலமான எதிர்கட்சி வரும் என்பதே சந்தேகமாகவுள்ளது. ஆகவே அரசின் பலம் எங்களிடம் இருக்கின்றது. இந்த அரசுடன் நெருக்கமாகவும் இருக்கின்றோம். அதனால் இந்த அரசின் மூலம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.
தமிழ் மக்களது உரிமைக்காக குரல் கொடுப்பதற்காகவே தேசிய கட்சியில் இருந்து விலகி தனித் தமிழ் கட்சியாக செயற்படுகின்றோம். அத்துடன் வருகின்ற அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டு அரசியலை செய்வதை விரும்புகின்றோம். அதன் மூலம் தான் மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். பொருளாதாரம் நலிவடைந்து செல்லும் போது தேசியம் எனப் பேசிக் கொண்டு இருந்து மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் இரண்டையும் சமாந்தரமாக கொண்டு போக வேண்டும்.
தொல்பொருள் ஆராட்சி என்ற பெயரில் பல காணிகள் அபகரிக்கப்படுகிறது. தொல்பொருளை நாம் மதிக்கின்றோம். ஆனால் சிறந்த திட்டமிடல் இல்லாது காணிகள் அபகரிக்கப்படுகின்றது. இதனை மீட்க வேண்டும். கடந்த அரசாங்கம் இருக்கும் போது தமிழ் மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்தார்கள். ஐ.எஸ். தீவிரவாத தாக்குதல் அதில் ஒன்று. அதற்கு துணை போன முஸ்லிம் தலைவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைகோர்த்துக் கொண்டது.
முஸ்லிம் மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. அவர்களில் அப்பாவிகள்
உள்ளனர். அவர்களை நாம் சகோதர இனமாக தான் பார்க்கின்றேன். ஆனால் அங்கு
வருகின்ற அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களை திட்டமிட்டு ஓரம் கட்டும் தீவிர
வாத போக்குடன் செயற்படுகிறார்கள்.
.. என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.....
கோட்டாபாய ஜனாதிபதியின் அரசாங்கம் இன்னும் 20 வருடங்கள் நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்..........
Reviewed by Author
on
July 18, 2020
Rating:

No comments:
Post a Comment