சீன ஜனாதிபதியை இப்போது பிடிக்கவில்லை....- அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு...
சீன ஜனாதிபதி சி ஜிங் பிங்க் உடன் தனக்கு இருந்த உறவு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறைவடைந்துள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக நேற்று வானொலி நேர்காணல் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறித்த உறவு நிலை தேய்வு காரணமாக நீண்ட காலமாக தான் சீன அதிபருடன் பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், “நான் சீன அதிபருடன் நீண்ட நாட்களாக நல்ல உறவை பேணி வந்தேன். அவரை எனக்கு பிடிக்கும். ஆனால் தற்போது அவ்வாறு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலேயே தனது மனநிலை மாறியதாக தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், திடீரென தமது உறவு தொடர்பாக வித்தியாசமாக உணர்ந்ததாகவும், அதன் காரணமாக நீண்ட நாட்களாக சி ஜின் பிங்க்குடன் தன பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான வர்த்தக உறவு நிலைகள் ஏற்கனவே முறுகல் நிலையினை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவில் மிக மோசமான அழிவுகளை
ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவலானது வர்த்தக முரண்பாடுகளை விட மோசமான விளைவுகளைத் தோற்றுவித்திருப்பதாக டொனால்டர் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
“இது வர்த்தக முரண்பாடுகள் தோற்றுவித்த விளைவுகளைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமானவை. இது மிகவும் இழிவான செயற்பாடு” என இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரை உலகளாவிய ரீதியில் குறித்த வைரஸ் காரணமாக 20 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 7 லட்சத்து 35 ஆயிரத்து 370க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவற்றுள், 5.1 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்புகள் மற்றும் 1 லட்சத்து 63 ஆயிரத்து 160க்கும் அதிகமான இறப்புகள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment