இலங்கையில் சட்ட விரோத துப்பாக்கி தொழிற்சாலை: முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் கைது
அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல்களுக்கு அமைவாக, துப்பாக்கிகளுக்கான பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக இயங்கி வந்த, திருக்கோவில் பிரதான வீதியருகே அமைந்திருக்கும் கட்டடம் ஒன்றினை - புலனாய்வு பிரிவின் அம்பாறை மாவட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
இதன்போது துப்பாக்கி தயாரிப்புக்கான பாகங்களை உற்பத்தி செய்யும் உருக்குத் தொழியாளியான தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த கந்தையா தவராசா எனும் 60 வயதுடைய நபர் ஒருவர், அங்கு கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து மேற்படி சட்ட விரோத துப்பாக்கிகளை தயாரிப்பதில் பிரதான நபராகச் செயற்பட்டு வந்த - விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான 35 வயதுடைய சோமசுந்தரம் சுஜேந்திரன் என்பவரை, அவரின் வீட்டில் வைத்து - அரச புலனாய்வு பிரிவினர் நேற்றைய தினம் கைது செய்தனர்.மேற்படி சோமசுந்தரம் சுஜேந்திரன் என்பவர் 2002ஆம் ஆண்டு மட்டக்கப்பிலுள்ள விடுதலைப் புலிகளின் 'டோரா போரா' முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்றவர் என, அரச புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.
புலிகள் அமைப்பில் 'தவரூபன்' எனும் பெயரால் அழைக்கப்பட்ட இவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் மோட்டார் பிரிவில் செயற்பட்டு வந்துள்ளார்.
இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர் அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு அரசு - புனர்வாழ்வளித்த போதும், நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சோமசுந்தரம் சுஜேந்திரன் எனும் முன்னாள் புலி உறுப்பினர், புனர்வாழ்வு பெற்றிருக்கவில்லை எனவும் மேற்படி புலனாய்வு உத்தியோகத்தர் கூறினார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளையும் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் அரச புலனாய்வு பிரிவினர் ஒப்படைத்துள்ளதாகத் தெரியவருகிறது.
இதனையடுத்து சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
.
.
இலங்கையில் சட்ட விரோத துப்பாக்கி தொழிற்சாலை: முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் கைது
Reviewed by Author
on
October 13, 2020
Rating:

No comments:
Post a Comment