மகனுக்காக ஏங்கும் தாய்மார் : மரபணு பரிசோதனைக்கு (DNA) நீதிமன்றம் உத்தரவு
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சுனாமியில் காணாமல் போன மகனை 16 வருடங்களுக்குப் பின்னர் மாறுவேடத்தில் சென்று கண்டுபிடித்த தாய் என்ற செய்தி தொடர்பாக எழுந்த பிரச்சினைக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 2ம் திகதி முறைப்பாடொன்றினை வளர்ப்புத்தாயான நூறுல் இன்ஷான் என்பவர் மேற்கொண்டிருந்தார்.
இதற்கமைய இன்று (5) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சம்மாந்துறை பொலிஸாருக்கு வழங்கிய அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு விசாரணையை நீதிவான் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது, சிறுவனின் வளர்ப்புத்தாய் என உரிமை கோரும் நூறுல் இன்ஷான் மற்றும் சுனாமியில் மகனை பறி கொடுத்ததாகத் தெரிவித்த அபுசாலி சித்தி ஹமாலியா ஆகியோர் ஆஜராகி தத்தமது நியாயங்களை முன்வைத்திருந்தனர்.
சுனாமியில் மகனைப் பறி கொடுத்ததாகத் தெரிவித்த அபுசாலி சித்தி ஹமாலியாவிற்கு சட்டத்தரணிகள் ஆஜராகி இலவசமாக வாதாடினர்.
குறித்த இவ்விரு தாய்மாரின் கருத்துக்களையும் செவிமடுத்த நீதிவான் குறித்த வழக்கில் உண்மையான தாயை இனங்காண விவாகரத்துப் பெற்று சென்ற இவ்விருவரின் கணவன்மார்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ம் திகதி ஆஜராகி மரபணு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சுனாமியில் மகனைப் பறி கொடுத்ததாகத் தெரிவித்த அபுசாலி சித்தி ஹமாலியா, தனது மகன் றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் எனவும், வளர்ப்புத்தாய் என உரிமை கோரும் நூறுல் இன்ஷான் என்பவர் முகம்மட் சியான் எனவும், நீதிமன்ற வாசலில் அழைத்து தத்தமது அன்பைப் பரிமாறியமை அனைவரதும் கவனத்தை ஈர்த்தது.
மகனுக்காக ஏங்கும் தாய்மார் : மரபணு பரிசோதனைக்கு (DNA) நீதிமன்றம் உத்தரவு
Reviewed by Author
on
October 08, 2020
Rating:

No comments:
Post a Comment