எல்லாவற்றையும் இறக்குமதி செய்தால் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியாது-ஜனாதிபதி
பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியைக் கொண்டு வருவதே தனது நோக்கம் என்று கூறிய ஜனாதிபதி , இந்த முயற்சிக்கு உதவும் நடவடிக்கைகளை கொண்டு வருமாறும், அதற்கான தடைகளை அடையாளம் காணுமாறும் தனியார் துறைக்கு முன்மொழிந்தார்.
குறிப்பாக கோவிட் 19 பரவலின் காரணமாக முடங்கியிருக்கும் பொருளாதாரத்திற்கு புத்துயிரளித்து நீண்டகால பொருளாதார வளர்ச்சியை அடைவதை நோக்கமாகக் கொண்டு தனியார் தொழில்முயற்சியாளர்களை குழுக்களாக சந்திக்க ஜனாதிபதி அவர்கள் அண்மையில் முடிவு செய்தார்.
இன்றைய சந்திப்பு இரண்டாவது குழுவுடன் இடம்பெற்றது. சுற்றுலா, கட்டிடம் மற்றும் வீதி நிர்மாணம், தொடர்பாடல் தொழில்நுட்பம், ஹோட்டல் வணிகம், மூலிகை உற்பத்தி, கால்நடைகள், பசும்பால், உப்பு உற்பத்தி, விவசாய உட்பத்திகள், சிறு ஏற்றுமதி பயிர்கள், சேதன பயிர்ச்செய்கை போன்ற துறைகளில் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
ஒரு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி அவர்களின் உறுதியான மற்றும் முறையான கொள்கைகளை தொழில்முயற்சியாளர்கள் பாராட்டியதுடன், பொருளாதார வளர்ச்சிக்கு 2021 வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நிவாரணங்களையும் பெரிதும் பாராட்டினர்.
தங்கள் வணிகத் துறைகளின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்த அவர்கள், தற்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விவரித்தனர்.
பயிற்றப்பட்ட மனிதவளத்தின் பற்றாக்குறை, நிறுவன திறமையின்மை, கட்டுமானப் பொருட்களின் பற்றாக்குறை, சில தொழிலாளர்களின் அலட்சியம் மற்றும் புதிய சந்தைகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஆகியவை அவர்கள் குறிப்பிட்ட முக்கிய பிரச்சினைகளில் அடங்கும்.
"சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் உயர் பொருளாதார சக்தியைப் பெற்றுக்கொடுப்பது முதன்மை தேவையாகும். எமது நாட்டின் மக்கள் தொகையில் 35% விவசாயிகள். விவசாயம் 70% மக்களின் வாழ்வாதாரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. இந்தத் துறையின் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் இளைஞர்கள் அதில் ஈர்க்கப்பட வேண்டும்” என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை வழங்குவதாக ஜனாதிபதி தொழில்முயற்சியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, முதலீட்டுச் சபையின் தலைவர் சஞ்சய மொஹட்டால ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
எல்லாவற்றையும் இறக்குமதி செய்தால் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியாது-ஜனாதிபதி
Reviewed by Author
on
December 11, 2020
Rating:
Reviewed by Author
on
December 11, 2020
Rating:


No comments:
Post a Comment