யாழ் நூலக எரிப்பு - 31.05.1981 40 வருட கால இருண்ட பக்கங்கள்!
தொடர்ந்து சுமுக வாழ்வு மீண்டு கொண்டிருந்தாலும், எழுபதுகளில் இயக்கங்களின் ஆரம்பத்தோடு மீண்டும் அதே இனவாதத்திற்கு எண்ணெய் ஊற்றப்படுகிறது.
1983 இனக்கலவரத்தை முன்னின்று நடத்திய "சிறில் மத்தியூ" என்ற யு.என்.பி அமைச்சர், "புலிகள் யார்?", "சிங்களர்களே! பௌத்தத்தை காத்திடுங்கள்" போன்ற தன்னுடைய புத்தகங்களின் மூலம் சிங்கள மக்களிடையே இனவாதத்தை தூண்டுகிறார். சிங்கள இனவாத கும்பலும், காடையர் கூட்டமும் தமிழர்களுக்கு எதிராக இயங்க ஆரம்பிக்கிறது.
நாட்டின் சிங்கள பகுதியில் வாழும் தமிழரையே தாக்கிக்கொண்டிருந்த இனவாதிகள் ,1977 ஆம் ஆண்டில் நேரடியாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்து தமிழ் மக்களின் சொத்துக்கள், உடைமைகளை அழித்து யாழ் நகர வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்து யாழ்ப்பாணம் எரிந்து நான்கு வருடங்கள் முடியவில்லை; மீண்டும் 1981 மே 31 இல் யாழ்ப்பாணம் எரியத் தொடங்கியது.
உச்சகட்டமாக 1981 யூன் 1 தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகமான யாழ் நூலகம் ஒரு இலட்சம் புத்தகங்களுடன் எரிந்து சாம்பலாகிறது.
ஏன் எரித்தார்கள்? அந்த வன்முறைகளுக்கு என்ன தான் காரணம்?
1981 மே 31 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம்.
யாழ்ப்பாணம் நகரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் காங்கேசன்துறை வீதியில் உள்ள நாச்சிமார் கோவில் வளாகத்தில், மாவட்ட அபிவிருத்திசபைத் தேர்தல் கூட்டமொன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இந்த தேர்தல் நாட்டில் உள்ள 24 மாவட்டங்களுக்கும் யூன் 4ஆம் திகதி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், யாழ் மாவட்டத்திற்கான தேர்தலின் "தமிழர் விடுதலைக் கூட்டணி" உடைய பிரச்சாரக்கூட்டம் தான் அது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் பொது மக்கள் குழுமியிருந்தனர்.
இதே காலத்தில் யாழ் மாவட்ட தேர்தல் பணிகளின் பாதுகாப்பிற்கென 400 மேலதிக பொலிஸார் அரசால் அனுப்பப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையம், துரையப்பா ஸ்டேடியத்திற்கு அருகில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த மேலதிக பாதுகாப்பிற்கான காரணம், மே 24 தான் யு.என்.பி பிரதான வேட்பாளர் தியாகராஜா தமிழ் ஆயூததாரிகளால் கொலை செய்யப்பட்டிருந்தார்.
அதே நேரம் ,தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக ஜே.ஆர், அமைச்சர் சிறில் மெத்தியுவையும்,மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமினி திசாநாயக்கவையும் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் ஆகியோரைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை மே 30 ஞாயிறு அன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியிருந்தார்.
அவர்கள் யாழில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில் தான் நாச்சிமார் கோவில் கூட்டம் நகர மேயர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கூட்டத்தின் பாதுகாப்பிற்கென கனகசுந்தரம் என்ற தமிழர் உள்ளடங்கலாக நான்கு பொலிஸார் காவலுக்கான அங்கே இருந்தனர். திடிரென்று வந்த ஆயூதமேந்திய சிலர் பொலிஸாரை சுட்டுவிட்டு ஓடிவிட சம்பவ இடத்திலேயே ஒரு போலிஸ்காரர் இறந்தார். இருவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த கனகசுந்தரம் பின் வைத்தியசாலையில் இறந்தார்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த
ஆயுதமேந்திய பொலிஸ் படை தமது வெறியாட்டத்தைத் தொடங்கியது. வீதியில் கண்டவர்களையெல்லாம் அடித்தனர்.
வாகனங்களை கொழுத்தினார்கள். அருகில் இருந்த அனைத்தையும் அடித்து உடைத்தார்கள். தீயிட்டு மகிழ்ந்தார்கள். நாச்சிமார் கோவில் கோபுர கட்டடவேலைகளுக்காக கட்டப்பட்ட மரம் கிடுகுகளில் வைக்கப்பட்ட தீயால் கோபுரமே பற்றி எரிந்தது.
பூபாலசிங்கம் புத்தக சாலை, பாட்டா செருப்புக் கடை, மதுபானநிலையம், நகைக்கடைகள் என 150க்கும் மேற்பட்ட கடைகள் கொள்ளையிடப்பட்டும் தீயிடப்பட்டும் நாசம் செய்யப்பட்டன. அருகிலிருந்த வீடுகளையும் வீதியிலிருந்த வாகனங்களையும் தீயிட்டு கரியாக்கினார்கள். பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு சாம்பலாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைக் காரியாலயமும் தீ வைத்து நாசமாக்கப்பட்டது.
நான்கு தமிழர்கள் வீதியிலேயே கொல்லப்பட்டார்கள்.
யாழ்ப்பாணப் பெரிய கடையில் கட்டியெழுப்பப்பட்ட திருவள்ளுவர் சிலை, ஓளவையார் சிலை, சோமசுந்தரப் புலவர் சிலை, ஆஸ்பத்திரி விதியில் உள்ள காந்தி சிலை என்பவற்றின் தலைகள் துண்டாக்கப்பட்டது. காங்கேசன்துறை வீதி வழியே பரவி சுண்ணாகம், காங்கேசன்துறை என யாழ்ப்பாணமே பற்றியெரிந்தது. கொலைகள் கொள்ளைகளும் சேர்ந்து கொண்டது.
அடுத்தநாள் 1981 யூன் 1 திங்கட்கிழமையும் தொடர்ந்தது வெறியாட்டம். உச்சமாக திங்கள் இரவு 10 மணியளவில் யாழ் நூலகத்தினுள் நுழைந்த காடையரும் பொலிசாரும் 1800 ஆம் ஆண்டுகளில் இருந்து சேமித்த அரிய சுவடிகள் உள்ளடங்கலாக 97,000 புத்தகங்களை தன்னகத்தே கொண்டு, தெற்காசியாவின் தலைசிறந்த நூலகமாக தலைநிமிர்ந்து நின்ற யாழ் நூலகத்தை ஒரே இரவில் சாம்பலாக்கினார்கள். மாநகரசபை தீயணைப்பு பிரிவு எவ்வளவோ முயன்றும் சாம்பலைத்தவிர எதுவும் மிஞ்சவில்லை.
நூலகம் எரிக்கப்பட்ட தகவலை கேட்டு தமிழறிஞர் தாவீது அடிகளாரின் உயிரும் பிரிந்தது.
இது எல்லாம் நடக்கும் போது, காமினி திசாநாயக்கவும் சிறில் மத்தியூவும் யாழில் இருந்து தங்கள் திட்டத்தை நிறைவேற்றி மகிழ்ந்தனர். தமிழரின் அறிவு செல்வத்தை அழித்து வெற்றி கண்டனர் அந்த மிருகங்கள். பிரேமதாசா ஜனாதிபதியான பின் யு.என். பி யில் இதே காமினி திசாநாயக்க, சிறில் மத்தியூ தலைமையில் உட்பூசல் ஏற்பட்ட போது பிரேமதாசவே "யாழ் நூலகம் எரித்தது இவர்களே" என புத்தளம் முஸ்லிம் கல்லூரி ஒன்றில் உரையாற்றும் போது வெளிப்படுத்தினார்.
இந்த பூசலின் பின் சிறில் மத்தியூ அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள காமினி திசாநாயக்க பிரேமதாச அரசை கவிழ்க்கும் நடவடிக்கைகளிலில் ஈடுபட்டு 1992 இல் யு.என்.பி யிலிருந்து விலகி 83 கலவரத்தின் இன்னொரு சூத்திரதாரியான "லலித் அத்துலமுதலி"யுடன் இணைந்து புதிய கட்சியை ஆரம்பித்தார்.
விடுதலைப்புலிகள் கொன்றதாக சோடித்து லலித் அத்துலமுதலியை 1993 ஏப்ரலில் பிரேமதாச கொலை செய்கிறார். 1993 மே 1 இல் பிரேமதாசவை விடுதலைப்புலிகள் படுகொலை செய்ததை அடுத்து மீண்டும் யு.என்.பி க்கு வந்து எதிர்கட்சி தலைவராகிறார் காமினி. 1994 ஜனாதிபதி தேர்தலில் யு.என்.பி யின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் 1994 ஒக்டோபரில் விடுதலைப்புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரியினால் கொல்லப்பட்டார்.
நூலகத்தை அவர்கள் எரித்தார்கள், குண்டுகள் அவர்களை பிளந்தது. பின் குண்டுகள் மழையென பொழிந்தது. குருதியில் நனைந்தது தமிழ்நிலம்.
வரலாறு நெருப்பினாலும் இரத்தத்தாலும் சிதறிய தசைத்துண்டங்களாலும் எழுதிய பக்கங்களின் எரியாத பக்கங்கள் இவை.
யாழ் நூலக எரிப்பு - 31.05.1981 40 வருட கால இருண்ட பக்கங்கள்!
Reviewed by Author
on
May 31, 2021
Rating:
Reviewed by Author
on
May 31, 2021
Rating:







No comments:
Post a Comment