அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

மன்னார் மாவட்டத்தை அனைத்து தரப்பினருடைய ஒத்துழைப்போடும் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த போதும் ஒரு சில நாட்களில் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துள்ளது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பாக அதிகாரிகளுடன் இன்று (5) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலில் துறை சார் அதிகாரிகள்,சுகாதார துறையினர், இராணுவம், பொலிஸ், கடற்படை அதிகாரிகள், மற்றும் உரிய திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவ்வாறு தெரிவித்தார். 

 அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தை அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடும் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தோம். ஆனால் ஒரு சில நாட்களில் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதலை கடைபிடிப்பதில் தவறி உள்ளார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.எனவே பொது மக்கள் மீண்டும் மிக இறுக்கமாக சுகாதார நடை முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை ஆராய்ந்துள்ளோம். துறை சார் திணைக்கள தலைவர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக மக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். 

 மக்கள் தமது கையினை கழுவி,சுகாதார நடைமுறையுடன் செயல்பட வேண்டும். போக்குவரத்து துறை சார்ந்தவர்களுக்கு அறிவித்தல்களை வழங்கி உள்ளோம்.பேருந்தில் ஆசனத்திற்கு ஏற்ப மாத்திரம் பயணிகளை ஏற்ற வேண்டும் எனவும்,மேலதிகமாக ஏற்றக் கூடாது என்ற கோரிக்கை முன் வைத்துள்ளோம். -பேருந்தில் அதிக எண்ணிக்கையாக பயணிகளை ஏற்றும் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணித்துள்ளோம்.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மக்களை பாதுகாக்க முடியும். -அதிகமானவர்கள் முகக்கவசங்களை நாடிக்கு அணிபவர்களாகவே உள்ளனர்.எனவே இவ்விடத்தில் கவனம் செலுத்தி,உரிய முறையில் முகக்கவசத்தை அணிவதற்கு மக்களை வலியுறுத்த வேண்டும் என்பதை தெரிவித்துள்ளோம். -மக்கள் கூடுகின்ற இடங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் தமது கவனத்தை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது. 

 மக்களின் தேவையற்ற நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,கொண்டாட்டம்,ஆலய திருவிழாக்கள் போன்றவற்றில் மக்கள் அதிகமாக ஒன்று கூடுவதை தடுக்குமாறும் கோரியுள்ளோம். பொதுமக்கள் அதிகாரிகளுடன் முரண்படுகிற நிலையும் ஏற்படும்.எனினும் அதை பொறுத்துக் கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும். மக்களை பாதுகாக்கும் வகையில் சுகாதார வழிகாட்டுதல்களை இறுக்கமாக கடைபிடிக்க மக்களை வழியுறுத்த அதிகாரிகள்,உரிய தரப்பினர் முன் வர வேண்டும்.என்பதனையும் தீர்மானித்துள்ளோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.







மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது Reviewed by Author on August 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.