புதுச்சேரி சிறையில் இருந்தபடியே திட்டமிட்டு இரட்டைக் கொலை - பதறவைக்கும் பழிக்குப் பழி
அதுதொடர்பாக காரைக்கால் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இது நடந்த மறுநாளே புதுச்சேரியில் நடந்த இரட்டைக்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வாணரப்பேட்டை தாவீதுபேட் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் என்கிற பாம் ரவி. இவருக்கு வயது 33. இவர் மீது 6 கொலை வழக்குகள், கொலை முயற்சி உள்பட ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவலையில் உள்ளன. சிறையில் இருந்த ரவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அதில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது நண்பரான பரிடா அந்தோனி (வயது 28) என்பவருடன் வாணரப்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் ரவி சென்றுள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல், ரவியின் மோட்டார் பைக்கை மறித்து நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர்.
அது அந்தோனி மீது பட்டு வெடித்ததில் அவர் கீழே விழுந்துவிட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பித்து ஓடிய பாம் ரவியை துரத்தி சென்று சரமாரிய வெட்டிப் படுகொலை செய்து விட்டு அந்த கும்பல் தப்பி சென்றுவிட்டது.
இந்த சம்பவத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சில் காயமடைந்த அந்தோனி, ஆயுதங்களால் வெட்டப்பட்ட பாம் ரவி இருவரும் நிகழ்விடத்திலேயே அடுத்தடுத்து உயிரிழந்தனர். அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை நடந்த இடத்திற்கு அருகே கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்ட விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த இரட்டை கொலை வழக்கில் புதுச்சேரி வாணரப்பேட்டை மற்றும் முதலியார்பேட்டை பகுதிகளை சேர்ந்த 5 நபர்களை தனிப்படை போலீசார் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர். புதுச்சேரி சூதாட்ட கிளப் ஒன்றில் கொள்ளை அடித்த வழக்கில் சிறையில் உள்ள பிரபல ரவுடிகளான வினோத் மற்றும் தீனா ஆகியார் சிறையில் இருந்தபடியே திட்டமிட்டு பாம் ரவியை கொலை செய்தது காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் சிறையில் இருக்கும் ரவுடிகளான வினோத் மற்றும் தீனா இருவரை நீதிமன்றத்தில் அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிலர் மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த கூலிப் படையினரையும் பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொலை வழக்கில் வினோத் என்ற கைதி சிறைச்சாலையில் இருந்து கொண்டே இந்த சம்பவத்தை திட்டமிட்டு செய்ததாக காவல்துறை தெரிவிக்கிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வினோத்தின் நெருங்கிய தொடர்பில் இருந்த திப்லான் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் பாம் ரவி குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அந்த சம்பவத்தில் இருந்தே கொலை செய்யப்பட்ட பாம் ரவி மற்றும் சிறையில் இருக்கும் வினோத்திற்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளது.
முன்னதாக புதுச்சேரியில் சூதாட்டப் பணம் கொள்ளை வழக்கில் வினோத்தை கைது செய்யும்போது அவரிடம் இரண்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி இருந்தது.
அப்போது விசாரித்தில் பாம் ரவி உள்ளிட்ட சிலரின் பெயரை குறிப்பிட்டு அவர்களால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருந்தால் தன்னை தற்காத்துக்கொள்ள வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் வைத்திருப்பதாக வினோத் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கொள்ளை மற்றும் வெடிகொண்டு, ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக வினோத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இதன் பிறகு வினோத் சிறையில் இருந்தபடியே சக கைதிகளின் உதவியுடன் தொலைபேசி மூலம் வெளியாட்களுடன் பேசி இந்த கொலைக்கு திட்டம் தீட்டியுள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். முதலில் புதுச்சேரியை சேர்ந்த உள்ளூர் நபர்கள் இருவர் பாம் ரவி மீது வெடிகுண்டி வீசியுள்ளனர்.
அது தவறுதலாக பாம் ரவியுடன் உடனிருந்த அந்தோனி மீது பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளார். இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த மூவரும் பாம் ரவியை துரத்திச் சென்று வெட்டியுள்ளனர்," என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரனிடம் பிபிசி தொடர்பு கொண்டு பேசியது. அப்போது பேசிய அவர், "இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதுபோல் நடைபெறாமல் தவிர்க்கும் வகையில் மோசமான ரௌடிகளை குண்டாசில் வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும் நிறைய ரௌடிகள் குண்டாசில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர்.
மேற்கொண்டு நிறைய ரௌடிகளுக்கு 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு புதுச்சேரிக்கு உள்ளே வராதவாறு வைத்துள்ளோம்," என்றார் அவர்.
"புதுச்சேரியில் உள்ள அனைத்து ரௌடிகள் மற்றும் அவர்களது செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இவர்களில் மோசமான ரௌடிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலத்தில் இதுபோன்று குற்ற சம்பவத்தில் யாரும் ஈடுபட முடியாது.
மேலும் அவர்கள் வருவாய் ஆதாரம் மற்றும் இதர நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். அதில் சந்தேகிக்கும் வகையில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்."
"சிறையில் இருந்தபடியே கைதிகள் குற்றச் சம்பவத்தில் ஈடுபடுவது தொடர்பாக எப்படி தகவல் வெளியே செல்கிறது என்பது குறித்து சிறைத்துறை அதிகாரிகளுடன் இணைந்து பார்த்து வருகிறோம். மேற்கொண்டு இனிவரும் நாட்களில் அனைத்து விதத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவோம்," என்று முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சிறையில் இருந்தபடியே திட்டமிட்டு இரட்டைக் கொலை - பதறவைக்கும் பழிக்குப் பழி
Reviewed by Author
on
October 26, 2021
Rating:
No comments:
Post a Comment