அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பிலிருந்து உயிர் தப்பிய ஒரு குடும்பத்தின் கதை

இலங்கையில் 277 பேரை பலி வாங்கிய ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு, இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி, இதே போன்றதொரு நாளில் காலை 8.45க்கு முதலாவது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. தேசிய தவ்ஹீத் ஜமாஆத் அமைப்பினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. மூன்று தேவாலயங்கள், மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 400ற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 

 8 தற்கொலை குண்டுதாரிகளினால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 40 வெளிநாட்டவர்களும், 45 சிறார்களும் உயிரிழந்தனர். ஈஸ்டர் தினத்தில் முதலாவது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பலர் உயிரிழந்திருந்தனர். இந்த தாக்குதல் நடத்தப்பட்ட தருணத்தில், தேவாலயத்திற்குள் இருந்த ஒரு குடும்பம், எந்தவித பாதிப்புக்களும் இன்றி உயிர் தப்பியது. aaaமூன்று வருடங்கள் கடந்த போதிலும், தமக்கு அந்த தருணத்தை இன்று வரை மறக்க முடியவில்லை என அந்த குடும்ப உறுப்பினர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். aaaaதமது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், தாக்குதல் நடத்தப்படும் தருணத்தில், தேவாலயத்திற்குள் இருந்ததாக தாக்குதலில் உயிர் தப்பிய மேரி எக்னஸ் தெரிவிக்கின்றார். 

 ''என் கணவரும், மூத்தவளும், இரண்டாவதும், குண்டு வெடிக்குற இடத்துலேயே தான் இருந்தாங்க. எங்கட மூத்த மகளும், இவளும் வெடிக்குற இடத்துலேயே தான் இருந்திருக்கா. அங்க இடம் இல்ல. சரியான ஜனம். நானும், மகளும் அந்த பக்கமா மாதாட சிலை இருக்க இடத்துல நாங்க மூன்று பேரும் நின்றோம். வெடிக்குற இடத்துக்கு நேர முன்னால நின்றோம். 10 நிமிஷத்துக்கு முதல்ல மூத்தவளும், இரண்டாவதும் மனசு சொல்லி இருக்கு. வெளிய போ... இல்லனா உள்ள போனு. கொஞ்சம் நேரம் இருந்து, இங்கன இருக்க ஏலாதுனு அவவும் முன்னால போய்டா. சரியாக பூசை முடிஞ்சு மெழுகு திரி பத்த வச்சேன். மெழுகு திரி பத்த வைக்ககுள்ள இவங்க யாரும் என் கிட்ட இல்ல. 

யாருமே என்கிட்ட இல்லையே அப்படி நினைச்சிட்டு, மெழுகு திரிய பத்த வச்சு ஜெபம் பண்ணிட்டிருந்தேன். மெழுகு திரி பத்த வச்சு முடியகுள்ள சத்தம் விலங்குச்சு. நான் நினைச்சேன் லைட் ஏதோ சோர்ட் ஆகி இருக்குனு. அப்படி நினைச்சு இப்படி பார்க்ககுள்ள கண்ணாடி ஒரு துண்டு, இவ கீழ குனிஞ்சுட்டா. இல்லனா இவ கழுத்து அப்படியே போய் இருக்கும். கீழ குனிஞ்ச நாள கடவுள் காப்பாத்திடாரு. என்ட மூத்த மகள் மிச்ச நல்லம். அவ செத்த சின்ன பிள்ளைகள எடுத்து எடுத்து பாதருக்கு கொடுத்து இருக்கா. என்ட 6 பேருல மூன்று பேர நான் இழந்துடனே அப்படி நினைச்சு. அந்தோனியார் கிட்ட கத்தி அழுதேன். அப்பறம் முன்னாடியே அவங்க இருந்தாங்க" என மேரி எக்னஸ் தெரிவிக்கின்றார். 


இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு கட்டாயம் நீதி கிடைக்க வேண்டும் என தாக்குதலில் உயிர் தப்பிய யுவதியான விக்டோரியா தெரிவிக்கின்றார். 

''நாங்க சர்ச் போனோம். அம்மா அப்பா எல்லாம் பிரிஞ்சுதான் இருந்தோம். மெழுகு திரி பத்த வச்ச நேரமே வெடிச்சுட்டு. வெடி ஏதாச்சு போடுறாங்கனு நினைச்சேன். ஆனா இல்ல. அதுக்கு அப்புறம் திரும்பி ஐயோனு பாக்குற நேரம் நிறைய மனுசர்கள்ட கால், சதை, ஈரல் எல்லாம் என் கால் கிட்ட. என்ட தலைய நான் மொட்டை அடிக்கலானு இருந்தேன். என் தலை உள்ளுக்கு எல்லாம் சதை. அந்த நேரம் எனக்கு எதுவுமே வெலங்க இல்ல. எங்க அம்மாவ நான் ரொம்ப லவ் பண்ணுறேன். நான் அம்மாவ மட்டும் தான் தேடிக்கிட்டு போனேன். எத்தனையோ மனுசர் ஐயோ தங்கச்சு புடிங்களேன். ஐயோ அக்கா... எங்க அப்பா உள்ளுக்கு-னு எல்லாம் சொல்லுறாங்க. சதை எல்லாம் இருக்கு. நான் அப்படியே பைத்தியமாகிட்டேன். 

 இது உள்ளுக்கு அம்மா இருப்பாங்க. இந்த சதை, ஈரல் உள்ளுக்கு அம்மா இருப்பாங்க. இதை நோன்டி எடுப்போமுனு. அதுக்குள் சின்ன புள்ள ஒன்று. எனக்கு உதவி பண்ணுற அளவுக்கு இல்ல. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. என்னால யாருக்கும் உதவ முடியாம போச்சு. அம்மாவே தேடி பார்க்கும் போதுஅம்மா பின்னாடி இருந்தாங்க. எனக்கு அந்த ஒரு நாள். என் வாழ்க்கையில திரும்ப அப்படி ஒரு நாள சந்திக்க கூடாது னு நினைக்கிறேன். இதை சும்மா விடக்கூடாது. எத்தனை மனுசர் செத்தாங்க. இதை இப்படியே விடக்கூடாது. கண்டிப்பா இதுக்கு ஒரு நீதி கிடைச்சே ஆகனும்" என விக்டோரியா குறிப்பிடுகின்றார்.

-BBC tamil





இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பிலிருந்து உயிர் தப்பிய ஒரு குடும்பத்தின் கதை Reviewed by Author on April 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.